சென்னை அணி பவுலிங் – Dinamalar

சென்னைச் செய்திகள்

அபுதாபி: ஐ.பி.எல்., தொடரை அட்டகாசமாக துவக்கியது சென்னை அணி. முதல் லீக் போட்டியில் அம்பதி ராயுடு, டுபிளசி அரைசதம் விளாச, 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது. 

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் துவங்கியது. அபுதாபியில் நடந்த முதல் லீக் போட்டியில், சென்னை, ‘நடப்பு சாம்பியன்’ மும்பை அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற சென்னை கேப்டன் தோனி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

திவாரி ஆறுதல்: மும்பை அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா (12) ஏமாற்றினார். குயின்டன் டி காக் (33) நல்ல துவக்கம் தந்தார். சூர்யகுமார் யாதவ் (17) நிலைக்கவில்லை. சவுரப் திவாரி (42) நம்பிக்கை தந்தார். ஹர்திக் பாண்ட்யா(14) சோபிக்கவில்லை. லுங்கிடி ‘வேகத்தில்’ குர்னால் பாண்ட்யா (3), போலார்டு (18), பட்டின்சன் (11) வெளியேறினர்.

மும்பை அணி 20 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. ராகுல் சகார் (2), பும்ரா (5) அவுட்டாகாமல் இருந்தனர். சென்னை அணி சார்பில் லுங்கிடி 3 விக்கெட் கைப்பற்றினார்.

ராயுடு கலக்கல்:  எட்டக்கூடிய இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு வாட்சன் (1), முரளி விஜய் (1) ஏமாற்றினர். பின் அம்பதி ராயுடு, டுபிளசி அபாரமாக ஆடினர். பும்ரா பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ராயுடு, ஐ.பி.எல்., அரங்கில் தனது 19வது அரைசதமடித்தார்.  ராகுல் சகார் பந்தில் ராயுடு (71 ரன், 3 சிக்சர், 6 பவுண்டரி) அவுட்டானார். ரவிந்திர ஜடேஜா (10) நிலைக்கவில்லை. சாம் கரான் (18) அதிரடியாக ரன் சேர்த்தார். பொறுப்பாக ஆடிய டுபிளசி அரைசதமடித்தார். பவுல்ட் வீசிய கடைசி ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி அடித்த டுபிளசி வெற்றியை உறுதி செய்தார்.

சென்னை அணி 19.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டுபிளசி (58), தோனி (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

எட்டாவது முறை

ஐ.பி.எல்., தொடரின் முதல் லீக் போட்டியில் தோற்பது மும்பை அணியின் வாடிக்கை. நேற்று, 8வது முறையாக தோல்வியை சந்தித்தது.

வயசானாலும் மாறாத ‘ஸ்டைல்’

கடந்த 2019 உலக கோப்பை அரையிறுதியில் (ஜூலை 9) பங்கேற்ற தோனி, 437 நாட்களுக்குப் பின் நேற்று மீண்டும் களமிறங்கினார். புதிய ஸ்டைல் தாடியுடன் காணப்பட்டார். லுங்கிடி பந்தில் குர்னால் பாண்ட்யா அடித்த பந்தை, அப்படியே வலது புறமாக பாயந்து சென்று தாவி பிடித்து அசத்தினார். 39 வயதானாலும் தோனி துடிப்பான ‘ஸ்டைல்’ மாறவேயில்லை.

ஆறு நட்கள் கடினம்: தோனி

தனிமைப்படுத்துதல் குறித்து சென்னை அணி கேப்டன் தோனி கூறுகையில், ‘‘ஐந்து மாதங்களாக குடும்பத்தினருடன் இருந்து விட்டு, 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்வது சவாலானது. இதில் முதல் 6 நாட்கள் ஓட்டல் ரூமில் தனிமையில் இருப்பது கடினமானது,’’ என்றார்.

சரியான பதிலடி

கடந்த சீசனில் சென்னை அணி, பைனல் உட்பட நான்கு போட்டியிலும் மும்பையிடம் தோல்வி அடைந்தது. இதற்கு இம்முறை பதிலடி கொடுத்தது.

Advertisement

Source: https://sports.dinamalar.com/2020/09/1600523636/IPL2020UAET20CricketChennaiMumbai.html