‘எப்படியாச்சும் அந்தச் சுவரைக் கைப்பத்தணும்” – மெட்ராஸ் வசனமல்ல, பாஜகவின் சுவர் அரசியல் ! – Top Tamil News

சென்னைச் செய்திகள்

”எப்படியாச்சும் அந்தச் சுவரைக் கைப்பத்தணும்! எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை. எத்தனை உசிர் போனாலும் பரவாயில்லை”

சரியாக 6 ஆண்டுகளுக்கு முன் இதே செப்டம்பர் மாதத்தில் (26-ம் தேதி) வெளிவந்த ‘மெட்ராஸ்’ படத்தில் இடம்பெற்ற ஒரு வசனம் இது. பலருக்கும் சென்னை நகரம் குறித்த பார்வையை மாற்றிய படம் மெட்ராஸ். சுவர் என்பது வெறும் சுவரல்ல. அது அதிகாரத்தின் நீட்சி, ‘ரத்தக்காவு’ கேட்கும் அதிகாரத்தின் கோரப் பற்கள் என படத்தின் கதையை அமைத்திருப்பார் அந்த படத்தின் இயக்குநர் ரஞ்சித்.

சுவர் யாருக்குச் சொந்தம் என்ற பிரச்சனையில் மோதிக்கொள்ளும் இரு அரசியல் கோஷ்டிகள் , வெட்டு குத்துவரை செல்வார்கள். சுவரைக் கைப்பற்றும் ஒரு கோஷ்டி அதில் தங்கள் கட்சித் தலைவரின் படத்தைப் பெரிதாக வரைந்து வைப்பார்கள். தங்கள் ஏரியாவில் இருக்கும் அந்த சுவரை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்று துடிக்கும் எதிர் கோஷ்டி.

சுவரை வைத்து நடக்கும் அரசியலை வைத்து ஏன் படம் எடுக்கக்கூடாது என்கிற யோசனையின் விளைவுதான் ‘மெட்ராஸ்’ திரைப்படம். அது வெறும் கதையல்ல என்பதும், தமிழகத்தில் அரசியல் கட்சிகள், உள்ளூர் அளவில் தங்கள் அதிகார செல்வாக்கை காட்டும் இடம் என்கிற உண்மையை ரஞ்சித் உணர்த்தி இருப்பார்.

அப்படி, சுவரை வைத்து நடக்கும் அரசியல் பஞ்சாயத்துகளில் இதுவரை அதிமுக, திமுக கட்சிகளே ஈடுபட்டு வந்தன. தலைவர்களின் பிறந்த நாள், அரசியல் பிரசாரம் ஆகியவற்றுக்கு சுவரெழுத்து எழுதுவது என்பது தனி கலை. உள்ளூரில் செல்வாக்காக இருந்தால் மட்டுமே சுவர் கிடைக்கும். அதிலும் 6 மாதங்களுக்கு முன்னரே வெள்ளையடித்து ரிசர்வ் செய்யப்பட்டது என முன்பதிவு செய்து சுவர்களை பிடித்து வைத்திருப்பார்கள். அதன் பின்னர் அந்த இடங்களில் போஸ்டர்கள் இடம் பிடித்தன.

இந்த விஷயத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகளும் பின்னர் பாமக, விசிக, தமிழக வாழ்வுரிமை கட்சி, புதிய தமிழகம் மற்றும் அந்த அந்த பகுதிகளில் செல்வாக்கு செலுத்தும் கட்சியினர் ஆதிக்கம் செலுத்தினர். சுவர்களை பிடிப்பதில் ஆரம்பத்தில் தகராறுகள் ஏற்படுவதும், பின்னர் சமாதானம் செய்து கொண்டு சுவர்களை பிரித்துக் கொள்வதும் நடக்கும்.

தேர்தல் தேதி அறிவிக்கும் முன் கட்சிகள் சுறுசுறுப்பு! சுவர் விளம்பரம்  வரையும் பணி விறுவிறுப்பு | Dinamalar

சகட்டு மேனிக்கு, பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, கோயில் என அனைத்து சுவர்களிலும் சுவரெழுத்துகள் எழுதப்பட்டதால், சிலர் நீதிமன்றம் வரை சென்று அதற்கு தடை வாங்கினர். அனுமதி பெற்ற சுவர்களை மட்டுமே பயன்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பின்னர் அனுமதி பெற்ற சுவர்களில் மட்டுமே அரசியல் விளம்பரங்கள் எழுதப்படுகின்றன.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: சுவர் விளம்பரங்கள் அழிப்பு தீவிரம் ! |  political advertisement destroyed by corporation employees - Tamil Oneindia

இதுவரையில், தமிழகத்தில் சுவரெழுத்து பஞ்சாயத்துகளில் ஈடுபடாமல் இருந்த கட்சி பாஜக. அவர்களுக்கு உள்ளூர் அளவில் செல்வாக்கு இல்லாததாலும், வேலை செய்ய ஆட்கள் இல்லாததாலும் இதுவரை அப்படியான தேவை அவர்களுக்கு இருந்ததில்லை. தேசியத் தலைவர்கள் வரும்போது ஒரு சில இடங்களில் தனியார் சுவர்களில் எழுதுவதுதான் வழக்கம்.

இந்தநிலையில்தான், திமுகவினருடன் நேரடியாக போஸ்டர் பஞ்சாயத்தில் இறங்கியுள்ளனர். சென்னை, நங்கநல்லூர் பகுதியில் திமுகவினர் எழுதி இருந்த சுவர் விளம்பரத்தை அழித்து பிரதமர் மோடியின் பிறந்த நாள் விழாவுக்கு எழுதியதாக கூறப்படுகிறது.

தேர்தல் நடத்தை விதிமுறை அமல் சுவர் விளம்பரங்களை அழிப்பது எப்போது? | In  Virdhunagar Election Rules not applied in full form- Election.dinakaran.com

பிறந்தநாள் முடிந்ததும் சுவர் விளம்பரத்தை அழித்த திமுகவினர், அதில் தங்கள் கட்சியின் விளம்பரம் எழுதியுள்ளனர். இதையறிந்து அங்கு திரண்ட பாஜகவினர் திமுக பிரமுகர்களுடன் தகராறு செய்து கை கலப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இரு தரப்பிலும் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், போலீசார் சிலரை கைது செய்து விடுவித்துள்ளனர்.

இதுவரையில் கழகங்கள் இல்லாத தமிழகம் என முழங்கி வந்த பாஜக, தற்போது கழகங்கள் போலவே சுவர் பிடிப்பது, சுவர் பஞ்சாயத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்கு இறங்கி உள்ளதை இந்த சம்பவத்தின் மூலம் பார்க்க முடிகிறது. எல்லாம் தேர்தல் வரைதான் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

மதுரை கிழக்கு தொகுதிக்கு பாஜக குறி வைப்பது ஏன்? - பின்னணி தகவல்கள் | bjp at  madurai - hindutamil.in

மெட்ராஸ் படத்தின் ஒரு வரி கதை என்றால். ஒரு சுவர் கதை என்று சொல்லலாம். அதற்கு பின்னால் உள்ள அரசியலை பேசியது அந்த படம். அந்த அரசியல், அதிகாரத்தை யார் பங்கிட்டுக் கொள்வது என்கிற போட்டி அரசியல் என்று புரிய வைத்தது. தமிழகத்தில் அந்த போட்டியில் பாஜகவும் இடம்பெறுகிறது என ஒரு சுவர் பிரச்சினையை வைத்து பெரிதாக்குகிறார்களா? என்பதை வரும் ஆண்டு தேர்தல் சொல்லிவிடும்.-
நீரை மகேந்திரன்

Source: https://www.toptamilnews.com/anyway-grab-that-wall-not-madras-verse-bjps-wall-politics/