சென்னையில் இருந்து திருவனந்தபுரம், மங்களூருக்கு சிறப்பு ரெயில் – தெற்கு ரெயில்வே அறிவிப்பு – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னையில் இருந்து திருவனந்தபுரம், மைசூருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததை தொடர்ந்து பொது போக்குவரத்துகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் தமிழகத்தில் கடந்த 7-ந்தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே ரெயில் போக்குவரத்தை தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்தது. அதைத்தொடர்ந்து தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே மட்டும் 13 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டது.

இந்தநிலையில் வெளிமாநிலங்களுக்கு இடையே ரெயில்கள் இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து முதற்கட்டமாக தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கும், கர்நாடகாவுக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.

அந்த வகையில் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்துக்கும், கர்நாடகா மாநிலம் மங்களூருக்கும் சென்னையில் இருந்து சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

* சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்-திருவனந்தபுரம் சிறப்பு ரெயில்(வண்டி எண்:02623), வரும் 27-ந்தேதி இரவு 7.45 மணிக்கு சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11.45 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். இதைப்போல் திருவனந்தபுரம்-சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் சிறப்பு ரெயில்(02624), வரும் 28-ந்தேதி மதியம் 3 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7.40 மணிக்கு சென்னை வந்தடையும்.

* சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்-மங்களூரு சிறப்பு ரெயில்(02601), வரும் 27-ந்தேதி இரவு 8.10 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மதியம் 12.10 மணிக்கு மங்களூரு சென்றடையும். இதைப்போல் மங்களூரு-சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் சிறப்பு ரெயில்(02602) வரும் 28-ந்தேதி மதியம் 1.30 மணிக்கு மங்களூருவில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5.35 மணிக்கு சென்னை வந்தடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source: https://www.dailythanthi.com/News/State/2020/09/25072514/Special-train-from-Chennai-to-Thiruvananthapuram-and.vpf