சென்னை ராஜீவ் காந்தி சாலையில் சுங்கக் கட்டணம் அக்.1 முதல் 10% உயர்கிறது: 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை ராஜீவ் காந்தி (ஓஎம்ஆர்) சாலை சுங்கச் சாவடிகளில் வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் சுங்கக் கட்டணம் 10 சதவீதம் உயர்த்தப்படுகிறது.

இதுதொடர்பாக ஐ.டி. விரைவுச் சாலை நிறுவன தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை ராஜீவ் காந்தி (ஐ.டி. காரிடார்) சாலையின் முதல் திட்டப் பகுதியை பயன்படுத்தும் வாகனங்களுக்கு வசூலிக்கப்பட வேண்டிய சுங்கக் கட்டணம் கடந்த 2006 முதல் 2036 வரையிலான 30 ஆண்டுகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை 10 சதவீதம் கட்டணம் உயர்த்தப்படும். குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க ஐ.டி. விரைவுச் சாலை நிறுவனத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் 2022 ஜூன் 30-ம் தேதி வரை புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆட்டோவுக்கு ஒருமுறை செல்ல ரூ.10, சென்றுவர ரூ.19, ஒருநாளுக்கு ரூ.33, மாதத்துக்கு ரூ.311 வசூலிக்கப்படும்.

காருக்கு ஒருமுறை ரூ.30, சென்றுவர ரூ.60, ஒருநாளுக்கு ரூ.100, மாதத்துக்கு ரூ.2,390 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலகுரக வாகனங்களுக்கு ஒருமுறை ரூ.49, சென்றுவர ரூ.98, ஒருநாளுக்கு ரூ.136, மாதத்துக்கு ரூ.3,050, பேருந்துக்கு ஒருமுறை ரூ.78, சென்றுவர ரூ.154, ஒருநாளுக்கு ரூ.231, மாதத்துக்கு ரூ.5,050 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சரக்கு வாகனங்களுக்கு ஒருமுறை ரூ.117, சென்றுவர ரூ.220, ஒருநாளுக்கு ரூ.340, மாதத்துக்கு ரூ.7,500, பல அச்சு வாகனங்களுக்கு (எம்ஏவி) ஒருமுறை ரூ.234, சென்றுவர ரூ.440, ஒருநாளுக்கு ரூ.676, மாதத்துக்கு ரூ.15,110 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கார்களை பொறுத்தவரை ஒரு மாதத்துக்கு 60 டிரிப்களுக்கு ரூ.1,100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/584192-rajiv-gandhi-road-toll-booth.html