சென்னையில் 10 பகுதிகளுக்கு ‘சீல்’ ஒரே தெருவில் 14 பேருக்கு கொரோனா மாநகராட்சி தகவல் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை மாநகராட்சியில் 10 தெருக்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது என்றும், ஒரே தெருவில் 14 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னையில் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் கொரோனா தொற்று அதிகளவில் இருந்தது. இதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை தொடர்ந்து அடுத்தடுத்த மாதங்களில் கொரோனா தொற்று சற்று குறைய தொடங்கியது.

இதனால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும் சென்னையில் குறைந்தது. இந்தநிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது மீண்டும் கொரோனா தொற்று கொஞ்சம், கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது.

அதன்படி, சென்னை மாநகராட்சியில் பாதிப்பு அதிகம் உள்ள 10 தெருக்களுக்கு மாநகராட்சி அதிகாரிகளால் ‘சீல்’வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கோடம்பாக்கம் மண்டலம் 135-வது வார்டில் உள்ள கிருபா சங்கர் தெருவில் 14 பேருக்கு தொற்று பாதிப்பு உள்ளதால் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

மேலும் ருக்குமணி தெருவில் 8 பேருக்கும், அண்ணாமலை நகர், 3-வது தெருவில் 6 பேருக்கும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதால் அதிகாரிகள் ‘சீல்’வைத்தனர். இதேபோல் வளசரவாக்கம் மண்டலம் நொளம்பூர் 17-வது தெருவில் 10 பேருக்கும், ஆலந்தூர் மண்டலம் ஆதம்பாக்கம் சுரேந்தர் நகர் 4-வது தெருவில் 9 பேருக்கும், சுபாஸ்ரீ நகர் 4-வது தெருவில் 7 பேருக்கும் தொற்று பாதித்ததால் அந்த தெருக்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நங்கநல்லூர் இந்து காலனி 1-வது குறுக்குத்தெருவில் 4 பேருக்கும், வால்டாஸ் காலனி 1-வது தெருவில் 5 பேருக்கும், சோழிங்கநல்லூர் மண்டலம் காந்திநகரில் 6 பேருக்கும், பெரியார் நீலாங்கரையில் 6 பேருக்கும் தொற்று பாதித்ததால் அந்த தெருக்கு மாநகராட்சி அதிகாரிகளால் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source: https://www.dailythanthi.com/News/Districts/2020/10/03072852/Sealed-for-10-areas-in-Chennai-Corona-for-14-people.vpf