சென்னையில் கரோனா அபாயப் பகுதியாக மாறி வரும் ஏழாவது மண்டலம் – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் செவ்வாயன்று 42 ஆக இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி 70 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே ஏழாவது மண்டலமான அம்பத்தூர் கரோனா அபாயப் பகுதியாக மாறி வருகிறது.

சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,288 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும் கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னை மாநகராட்சி இது தொடர்பாக வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பொன்றில், அம்பத்தூரில்தான் அதிகபட்சமாக 29 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும், அதனைத் தொடர்ந்து தண்டையார்பேட்டையில் 11 பகுதிகளும் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 12 மண்டலங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. 

சென்னையில் கரோனா பாதித்து சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை காலை நிலவரப்படி 13,446 ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில் 6 மண்டலங்களில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஆயிரத்தை எட்டிவிட்டது.

சென்னையில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 1,288 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 79,424- ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா பாதிப்பு காரணமாக 3,373 போ் உயிரிழந்துள்ளனா்.

பொருளாதார நடவடிக்கைகளுக்காக சென்னை மாநகரத்தில் பல்வேறு தளவர்கள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போது கரோனா தொற்று உயர்ந்து வருவதைக் கட்டுப்படுத்த ஒருவருக்கு எப்படி கரோனா தொற்று பரவியிருக்கலாம் என்பதை கண்டறிவது மிகவும் கடினமானதாக மாறிவிட்டதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.

ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சென்னையில் எந்த கரோனா அபாயப் பகுதிகளும் இல்லை. பொதுமுடக்கம் தளர்த்தப்பட்ட போதும் கரோனா பாதிப்பும் படிப்படியாகக் குறைந்தே வந்தது. ஆனால் தற்போது கரோனா அபாயப் பகுதியாக அம்பத்தூர் மண்டலம் உருவாகி வருகிறது.

சென்னையில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதித்து வந்த நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 1.50 லட்சத்தை அண்மையில் எட்டியது.

வெள்ளிக்கிழமை மேலும் 1,288 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 79,424-ஆக அதிகரித்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 1 லட்சத்து 62,605 போ் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனா். 13,446 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். சென்னையில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி இறப்பு எண்ணிக்கை 3,373- ஆக அதிகரித்துள்ளது.

அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கத்தில் 1,300 என்ற அளவிலும், திருவிக நகரில் 1,200 என்ற அளவிலும், அம்பத்தூர், அடையாறில் 1000-க்கும் அதிகமான கரோனா நோயாளிகள் உள்ளனர். கடந்த மாதம் இறுதி வரை கரோனா பாதிப்பு மெல்ல குறைந்து வந்த நிலையில் தற்போது படிப்படியாக அதிகரித்து வருகிறது சென்னைவாசிகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
 

Source: https://www.dinamani.com/tamilnadu/2020/oct/10/ontainment-zones-in-chennai-surge-to-70-3482289.html