சென்னை கோயம்பேடு சந்தையில் 50 பேருக்கு கொரோனா, பலர் வியாபாரிகள் – BBC Tamil

சென்னைச் செய்திகள்

முக்கிய இந்திய நாளிதழ்கள் மற்றும் அவற்றின் இணைய பக்கங்களில் வெளியான செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

கோவிட்-19: சென்னை கோயம்பேடு சந்தையில் 50 பேருக்கு கொரோனா

சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி விற்பனை சந்தையில் உள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டதில் மொத்தம் 50 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் வியாபாரிகள் என்று செய்தி வெளியிட்டுள்ளது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்.

அந்த சந்தை மீண்டும் திறக்கப்பட்ட இரண்டு வாரங்களில் இதுவரை சுமார் 3,500 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. ஒவ்வொரு நாளும் சுமார் 200 பேரின் பரிசோதனைக்கு தேவையான மாதிரிகள் சேகரிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த சந்தைக்கு வருவோரின் பரிசோதனைக்காக மட்டும் நான்கு குழுக்கள் வெவ்வேறு வாயில்கலில் கோயம்பேடு சந்தையில் முகாமிட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.

மீண்டும் திறக்கப்பட்ட கோயம்பேடு சந்தையில் சுமார் கடைகள் மீண்டும் திறந்திருந்தாலும், அங்கு வந்து செல்ல பொதுமக்களுக்கு அனுமதியில்லை. வெறும் மொத்த வியாபாரிகள் மட்டுமே சந்தைக்கு வந்து பொருட்களை கொள்முதல் செய்து செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள் என்று கூறுகிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி.

ஒரு நாள் தூதரான டெல்லி பெண்

இந்தியாவுக்கான ஒரு நாள் பிரிட்டன் தூதராக தில்லியைச் சோ்ந்த சைதன்யா வெங்கடேஸ்வரன் (18) நியமிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது தினமணி.

உலகம் முழுவதும் பெண்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதை வலியுறுத்தும் தூதரக நிகழ்ச்சியின் ஒருபகுதியாக அவருக்கு அந்த ஒரு நாள் அடையாளப் பதவி வழங்கப்பட்டது.

பெண்களுக்கு அதிகாரமளித்தலை வலியுறுத்தவும் அவா்கள் எதிா்கொண்டுள்ள சவால்களை வெளிப்படுத்தவும் ‘ஒரு நாள் தூதா் பதவி’க்கான போட்டியை பிரிட்டன் தூதரகம் கடந்த 2017-ஆம் ஆண்டிலிருந்து நடத்தி வருகிறது.

இந்தப் போட்டில் பங்கேற்க, 18 முதல் 23 வயது வரை கொண்ட இளம் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

2020-ஆம் ஆண்டுக்கான அந்தப் போட்டியில் தில்லியைச் சோ்ந்த சைதன்யா வெங்கடேஸ்வரன் வெற்றி பெற்றாா். அதையடுத்து, இந்தியாவுக்கான பிரிட்டன் தூதராக அவருக்கு கடந்த புதன்கிழமை பொறுப்பு வழங்கப்பட்டது.

ஏற்கெனவே கடந்த 2017-ஆம் ஆண்டிலிருந்து 3 பெண்கள் ஒரு நாள் பிரிட்டன் தூதராகப் பொறுப்பேற்ற நிலையில், 4-ஆவதாக சைதன்யா வெங்கடேஸ்வரன் அந்தப் பதவியை வகித்தாா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன என்கிறது தினமணி.

அயோத்தியில் சாகும்வரை போராட்டம் தொடங்கிய சாது

உத்தர பிரதேச மாநிலத்தின் அயோத்தியில், இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என கோரி ஒரு சாது சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கியிருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது இந்து தமிழ் திசை.

அயோத்தியின் தபஸ்வீ மடத்தின் சாதுவாக இருப்பவர் மஹந்த பரமஹன்ஸ் தாஸ். இவர் இரண்டு வருடங்களுக்கு முன் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் எனக் கோரி சாகும்வரை உண்ணாவிரதம் நடத்தி இருந்தார்.

இதன்மூலம், சற்று பிரபலமான இந்த சாது மீண்டும் ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை சாகும்வரை எனத் தொடங்கி உள்ளார். இதற்காக அவர், அயோத்தியின் ராம் ஜானகி கோயிலின் முன்பாக இன்று முதல் அமர்ந்திருக்கிறார்.

இந்தமுறை அது, இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி துவக்கி உள்ளார். தனது கோரிக்கை நிறைவேறும் வரை தனது போராட்டத்தை முடிக்கப்போவதில்லை என்றும் அந்த சாது அறிவித்துள்ளதாக இந்தி தமிழ் திசை கூறியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: https://www.bbc.com/tamil/india-54519360