சென்னை விமான நிலைய பன்னாட்டு சரக்ககப்பிரிவில் விடிய, விடிய சி.பி.ஐ. சோதனை – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய சரக்ககப்பிரிவுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவு போதை மாத்திரைகள் கடத்தப்பட்டு வந்தன.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய சரக்ககப்பிரிவுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவு போதை மாத்திரைகள் கடத்தப்பட்டு வந்தன. அதேபோல் வெளிநாடுகளுக்கு செல்லும் சரக்கு விமானங்களிலும் வெளிநாட்டு பணம் கடத்தப்பட இருந்தன. இவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சி.பி.ஐ. அதிகாரிகள் குழு, சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பன்னாட்டு சரக்ககப்பிரிவுக்கு வந்தது. அங்கு வெளிநாடுகளுக்கு அனுப்ப இருந்த பார்சல்களை சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு செய்தனர். சி.பி.ஐ. அதிகாரிகள் சரக்ககப்பிரிவில் நேற்று அதிகாலை வரை விடிய, விடிய இந்த சோதனையை நடத்தினர்.

சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பும் பொருட்களின் மதிப்பை குறைவாக காட்டி வரிஏய்ப்பு நடப்பதாக வந்த புகாரின்பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.

மேலும் சென்னையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு சென்ற பார்சல்களை ஆய்வு செய்ததில் வெற்றிலை பெட்டிகளில் பெரும் அளவில் வெற்றிலைக்கு அடியில் பூக்கள் மறைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏஜெண்டுகள், அதிகாரிகளிடம் விசாரிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

விமான நிலைய சரக்ககப்பிரிவில் சி.பி.ஐ. அதிகாரிகள் விடிய, விடிய நடத்திய சோதனையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Source: https://www.dailythanthi.com/News/State/2020/10/13002501/CBI-at-Chennai-Airport-International-Cargo-Division.vpf