மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் – தினகரன்

சென்னைச் செய்திகள்

நன்றி குங்குமம் தோழி

மெட்ராஸ் (சென்னை) உருவாகி 381 ஆண்டுகள் ஆகிவிட்டன. சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் 2004 ஆம் ஆண்டு முதல் ‘சென்னை தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. கிழக்கு இந்திய கம்பெனி, தாமல் வெங்கடப்பா நாயக்கரிடம் இருந்து ஒரு சிறு நிலத்தை வாங்கி சென்னை நகரத்தை உருவாக்கியது. அந்த தினம் தான் சென்னை தினம் என்று இன்று கொண்டாடப்படுகிறது. . வந்தவாசியை ஆண்ட தாமல் வெங்கடப்பா நாயக்கர், பூந்தமல்லியை ஆண்ட தாமல் அய்யப்ப நாயக்கர் சகோதரர்களின் தந்தையான சென்னப்ப நாயக்கரை நினைவு கூறும் விதமாகத்தான் சென்னை என்று அழைக்கப்படுகிறது.

பத்திரிகையாளர்களான சசி நாயர், மயிலாப்பூர் டைம்ஸின் ஆசிரியரான வின்சன்ட் டி சொஸா, மெட்ராஸ் மியூசிங்ஸின் ஆசிரியரான முத்தையா ஆகிய மூவரும் இணைந்து உருவாக்கியதே இந்த சென்னை தினம். முதன் முதலில் ஒரு சில கருப்பு வெள்ளைப் படங்களுடன் 2004 ஆம் ஆண்டு தொடங்கிய இந்தக் கொண்டாட்டம் இன்று வளர்ச்சியடைந்து புகைப்படக் கண்காட்சி, உணவுத் திருவிழா, மாரத்தான் ஓட்டம் எனப் பல பரிமாணங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கொரோனா தொற்றால் களையிழந்து காணப்பட்டாலும், ஒரு சிலரின் முன்னெடுப்புகளால் சென்னை தினம் மக்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றது.

“இன்ஸ்டாகிராமில் சென்னை கலாச்சாரங்களைப் படம் வரைந்து போட்டிருந்தவரது படத்தை நாம் ஏன் பிரின்ட்  போட்டு சென்னை தினத்தன்று காட்சிக்கு வைக்கக் கூடாது என்ற யோசனை எழுந்தது. இந்த கொரோனா காலத்தில் மெட்ராஸ் பற்றிப் பேசுவது ஒரு நேர்மறையான விஷயமாகவும், மக்கள் மத்தியில் ஒரு பக்கம் பயமிருந்தாலும், மற்றொரு பக்கம் வெளியே வர வேண்டுமென்கிற ஏக்கமும் இருப்பதை இணைத்துச் செய்து பார்க்கலாமே என்ற ஆசையில் ‘மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்’ என்ற தலைப்பில் இந்த ஓவியக் கண்காட்சி அமைக்கப்பட்டது” என்கிறார் ‘வெண்பா’ காட்சிக்கூடம் மூலம் அதை ஒருங்கிணைத்த திரைப்பட இயக்குநரும், பிரபல டிசைனருமான சித்தார்த்.

“தற்போது இன்டீரியர் டிசைனராக இருக்கும் நான் 150 திரைப்படங்களுக்கு மேல் பப்ளிசிட்டி டிசைனராக பணியாற்றியுள்ளேன். விஷ்ணு விஷாலை வைத்து ‘பலே பாண்டியா’ என்கிற படம் இயக்கினேன். கலை சார்ந்த பொருட்கள் எல்லா இடங்களிலும் முக்கியமானதாக இருக்கிறது. அது ஓவியங்களாகட்டும், சிலைகளாகட்டும் ஏதாவது ஒரு விஷயத்தில் எங்காவது ஒரு இடத்தில் தேவைப்படுகிறது. இதை விதவிதமாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே அவர்களின் வசதிக்குத் தகுந்தாற் போல் லட்சம், கோடிகளில் வாங்குகிறார்கள். சிலர் புகைப்படங்களாக வைத்துக் கொள்கின்றனர்.

முன்பெல்லாம் பெரிய பெரிய ஓவியங்களைப் பார்ப்பதற்கான வாய்ப்புகள் இருந்தது. ஆனால் தற்போது வீடே சின்னதாகிவிட்டது. அதற்கேற்றார் போல் பெயின்டிங் வேண்டும், அது அழகாகவும், ஒரிஜினலாகவும் இருக்கணும். எங்கோ ஓர் இடத்தில் நம் நளினம், நம்மை சார்ந்த விஷயங்களைக் கொண்டு வர வேண்டும் என்று ஆரம்பித்ததுதான் இந்த வெண்பா காட்சிக்கூடம். வெண்பா என்பது நம் தமிழில் சிறியது, அழகு… அப்படிப்பட்ட அழகிய காட்சிக்கூடத்தில் ஒரு கலைஞனையும், அந்த கலையை ரசிப்பவனையும் இணைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம்.

ஆனால் பெரும்பாலான காட்சிக் கூடங்கள் மேல்தட்டு மக்களுக்காகவே அமைக்கப்படுகிறது. அதையே ஏன் எல்லோருக்கும் சேர்க்கக் கூடாதுன்னு எனக்குள் எண்ணம் ஏற்பட்டது.அந்த நேரத்தில்தான் மெட்ராஸ் தீம்-ல ஒரு கிராபிக்ஸ் பண்ணணும்னு தோணுச்சு. இன்ஸ்டாகிராமில் சென்னை தெருக்களை ஓவியமாகத் தீட்டியவரிடம் அனுமதி வாங்கி அதை பிரின்ட் போட்டு காட்சிக்கு வைத்தோம். அவரோடு மற்றொரு கலைஞர்களும் இணைந்து சென்னையின் அழகினை மக்களின் பார்வைக்கு விருந்தளித்தனர். இது எங்களின் முதல் முயற்சி. மேலும் கலை சார்ந்து பல நிகழ்ச்சிகள் வெண்பாவில் தொடர்ந்து நடைபெறும். கலை எல்லோருக்குமானது” என்கிறார் சித்தார்த்.

“ஒரு டாக்குமென்டேஷன் மாதிரி பண்ணலாம்னு ஆரம்பித்ததுதான் இந்த ஓவியங்கள்” என்று பேசத் துவங்கினார், ஓவியர் வர்ஷினி. ‘‘என் படைப்புகள் இங்கு காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. சென்னை தெருக்களில் எந்த மாதிரி மக்கள் இருக்காங்க, அவங்க செய்யும் வேலைகள், அவர்கள் அணியும் உடைகள்… இதெல்லாம் தான் என்னை வரையத் தூண்டிய விஷயங்கள். குறிப்பாக அவர்கள் உடுத்தியிருக்கும் உடையின் வண்ணங்கள் என்னை மிகவும் ஈர்த்தது.

சாலைகளில் நடக்கும் போது பழக்கடைக்காரங்க, இளநீர் விக்கிறவங்க, வீட்டு பக்கத்திலேயே துணி சலவை செய்றவங்க, பஞ்சுமிட்டாய் விக்கிறவங்க, தண்ணி பிடிக்கக் குடம் எடுத்துட்டு வரவங்க, அவங்க துணி டிசைன், குடங்களின் நிறம்… என ஒவ்வொன்றும் எனக்குள் மறைந்திருந்த கலையை தட்டி எழுப்பியது. இன்னும் சொல்லப்போனா, நம்ம ஊரில் மட்டும் தான் நைட்டி மேல துண்டு போட்டுக்கொண்டு வெளியே வருவாங்க. இப்படி ஒவ்வொரு விஷயங்களையும் நுணுக்கமாகப் பார்த்தேன்.  

என்னுடைய மாஸ்டர் டிகிரி இத்தாலி நாட்டில் மிளானில் முடித்துவிட்டு சென்னைக்கு வந்த போது அதே பார்வையில் இங்குள்ள தெருக்களில் உள்ள மக்களை வரைய ஆரம்பித்தேன். நம் நாட்டில் மட்டுமே உடைகள் முதல் கலாச்சாரம் வரை பல்வேறு விஷயங்களில் நாம் வேறுபட்டிருக்கிறோம். அந்த பிரதிபலிப்பை சென்னையின் ஒரே தெருவில் பார்க்க முடியும். அதை எல்லாம் ஓவியங்களாக தீட்டி டிஜிட்டல் முறையில் மாற்றி அமைத்தேன். நம்ம ஊரை அடிப்படையா வைத்து வரைந்துதான் என்னை தனித்துவமா காட்டுவதாக நினைக்கிறேன்” என்றார் வர்ஷினி.  

“சென்னையிலிருந்து விலகி தற்போது ஸ்வீடன் நாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும், சென்னையின் வரலாற்றினை நான் கட்டிடக்கலை பயிலும் போது தெரிந்து கொண்டேன். அவ்வாறு நான் சேகரித்த அறிவு மட்டுமில்லாமல் கலை மேல் எனக்கு இருந்த ஆர்வம் மூலமாக சென்னையை ஓவியம் மூலம் கற்பனைத்திறனில் உருவாக்கி இருக்கிறேன்’’ என்கிறார் சுனில்.

“மக்கள் மற்றும் இடங்களை பேசும் கலைகள்தான் என்னுடைய விருப்பம். மேலும் எந்த ஒரு கலையாக இருந்தாலும் அதை பார்க்கும் பார்வையாளருக்கு ஒரு அழகான கதை சொல்ல வேண்டும். என்னுடைய ஓவியங்கள் அனைத்தும் அர்த்தமுள்ளதாகவும், வருங்காலத்தை அடிப்படையாகக் கொண்டதுமாக இருக்க வேண்டும்’’ என்றார் சுனில்.

தொகுப்பு: அன்னம் அரசு

படங்கள்: ஜி.சிவக்குமார்

Source: https://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=7540