சென்னை அணிக்கு ‘அக்னிப்பரீட்சை’: ராஜஸ்தானுடன் மோதல் – Dinamalar

சென்னைச் செய்திகள்

அபுதாபி: தொடர்ச்சியான தோல்விகளால் துவண்டு கிடக்கும் தோனியின் ‘மஞ்சள் படை ’சென்னை அணி, இன்று கட்டாய வெற்றியை நோக்கி, ராஜஸ்தானை சந்திக்கிறது. 

ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. சார்ஜாவில் நடந்த லீக் போட்டியில் சென்னை அணி 20 ஓவரில் 179/4 ரன்கள் எடுத்தது. சிறிய மைதானமான இங்கு 200 க்கும் மேற்பட்ட ரன்களே எளிதாக சேஸ் செய்யப்படும் நிலையில் சென்னை அணி இக்கட்டான நிலையில் பந்து வீசத் துவங்கியது. முதல் ஐந்து ஓவர்களில் சென்னை அணிக்கு எல்லாம் நல்லவிதமாகவே சென்றது. டில்லி 29/2 ரன்கள் மட்டும் எடுத்தது.

பின் சொதப்பல் துவங்கியது. சகார், தோனி, வாட்சன் மற்றும் ராயுடு என நான்கு பேர் தவான் கொடுத்த கேட்ச்சை பிடிக்காமல் விட்டு  வெறுப்பேற்றினர். கடைசி ஓவரில் 17 ரன் என்ற நிலையில் அக்சர் படேலை அடுத்தடுத்து சிக்சர் அடிக்கவிட்டு அதிர்ச்சி கொடுத்தார் ஜடேஜா. கடைசியில் சென்னை அணி இத்தொடரில் 6வது தோல்வியை பதிவு செய்தது. 

9 போட்டியில் 3ல் மட்டும் வென்ற சென்னை, மீதமுள்ள 5 போட்டியிலும் வென்றாக வேண்டும் என்ற கட்டாய நிலையில் இன்று ராஜஸ்தானை சந்திக்கிறது. சென்னை அணி துவக்கத்தில் சாம் கர்ரான் (99 ரன்) சுதாரிக்க வேண்டும். வாட்சன் (277), டுபிளசி (365) ரன் வேகம் இன்னும் அதிகமாக இருக்க வேண்டும். ‘மிடில் ஆர்டரில்’ அம்பதி ராயுடு (237), ஜடேஜா (159) நம்பிக்கை தருகின்றனர். கேப்டன் தோனி (136) பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்புவது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தருகிறது. 

பவுலிங் ஏமாற்றம்

பந்துவீச்சை பொறுத்தவரையில் தீபக் சகார் (8 விக்.,), ஷர்துல் தாகூர் (9), சாம் கர்ரான் (10) ஆறுதல் தருகின்றனர். சுழலில் ஜடேஜா (4) ரன்களை வாரி வழங்குகிறார். துவக்க போட்டிகளில் ஜொலித்த கரண் சர்மா (4), விக்கெட்டுகள் வீழ்த்தாது ஏமாற்றம் தான். பிராவோ காயத்தால் அவதிப்படுவதால் இன்று இம்ரான் தாகிர் களமிறங்கினால் நல்லது. 

வெற்றி முக்கியம்

ராஜஸ்தான் அணி 9 போட்டியில் 3 வெற்றி, 6 தோல்வி பெற்றுள்ளது. இன்று வென்றால் மட்டும் அடுத்த சுற்றை தக்கவைக்கலாம். பட்லர் (192), டிவாட்டியா (222), சஞ்சு சாம்சன் (236), கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் (220) என பலரும் சீரான ரன்குவிப்பு கொடுத்தாலும், பேட்டிங் நிலையற்றதாக உள்ளது. டில்லி, பெங்களூரு அணிக்கு எதிரான கடந்த போட்டிகளில் வெற்றி பெற வாய்ப்பிருந்தும் கடைசி நேர சொதப்பலால் தோற்க நேரிட்டது. 

பவுலிங்கில் ஆர்ச்சர் (12 விக்.,) மட்டும் ஜொலிக்கிறார். மற்றபடி டிவாட்டியா, கார்த்திக் தியாகி, ஸ்ரேயாஸ் கோபால், உனத்கட் என பலரும் அணியை இக்கட்டான நேரங்களில் கைவிடுகின்றனர். இன்று இரு அணிகளுக்கும் வெற்றி முக்கியம் என்பதால் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

மாறுவாரா தோனி

சென்னை அணி கேப்டன் தோனி தொடர்ந்து தவறுகள் செய்கிறார். ‘பார்மில்’ இல்லாத வாட்சனுக்கு அடுத்தடுத்து வாய்ப்பு தருகிறார். இவர் அதிக பந்துகளை விழுங்குகிறார்.

* ரெய்னா, ஹர்பஜன் விலகிய போதும் மாற்று வீரர்களை சேர்க்க முயற்சிகள் எடுக்கவில்லை. மாறாக ‘பியூஸ்’ போன பியுஸ் சாவ்லாவை வைத்து அணியை கரை சேர்க்க முயற்சிக்கிறார்.

* ‘ஆல் ரவுண்டர்’ போர்வையில் கேதர் ஜாதவுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு தருகுகிறார். ஆனால் பந்துவீச வாய்ப்பு தரமாட்டார். 

* எதிர்ப்புகள் அதிகமானதால் ஒரு போட்டியில் மட்டும் ஜெகதீசனுக்கு வாய்ப்பு தந்து விட்டு, மீண்டும் கேதர் ஜாதவை சேர்த்துக் கொண்டார்.

* தோனிக்கு ‘பிட்னஸ்’ இருந்தாலும் போட்டிக்கு தகுந்து உடற்தகுதி இல்லாமல் அவதிப்படுகிறார். இதனால் பேட்டிங் சொதப்புகிறது. 

* கடந்த சீசனில் அதிக விக்கெட் சாய்த்த ‘முதல்வன்’ சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாகிரை (26 விக்.,) அணியில் சேர்க்க மறுக்கிறார். 

இதுபோன்ற தவறுகளால் அடுத்தடுத்து தோல்வி கிடைத்தாலும் மறுபடியும் அதே அணியுடன் களமிறங்கி ரசிகர்களுக்கு வெறுப்பேற்றுகிறார். இன்று மாறுவாரா என பார்க்கலாம். 

பிராவோவுக்கு ‘ரெஸ்ட்’

கரீபிய தொடரின் பைனலில் முழங்கால் காயம் காரணமாக பிராவோ, பந்துவீசவில்லை. சென்னை அணிக்காக முதல் 3 போட்டியில் பங்கேற்கவில்லை. அடுத்த 6 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார். இத்தொடரில் அதிக ‘யார்க்கர்’ வீசிய  பவுலர்களில் நடராஜன் (40), பும்ராவுக்கு (19) அடுத்து பிராவோ (14) இருந்தார். தற்போது டில்லிக்கு எதிராக மீண்டும் காயமடைந்தார் பிராவோ. 

பயிற்சியாளர் பிளமிங் கூறுகையில்,‘‘பிராவோவுக்கு வலது பக்க தொடையின் பின்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. கடைசி ஓவரை வீச முடியவில்லை என அவர் வருத்தப்பட்டார்.  குறைந்தது சில நாட்கள் அல்லது சில வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது,’’ என்றார்.

தேவை வெற்றி

சென்னை அணி இதுவரை 9 போட்டியில் 3ல் வென்று 6 புள்ளி மட்டும் பெற்றுள்ளது. மீதமுள்ள 5 போட்டியிலும் வென்றால் 16 புள்ளி கிடைக்கும். பிறகு தான் ‘பிளே ஆப்’ குறித்து யோசிக்க முடியும். ஒருவேளை இன்று தோற்றால் அடுத்த சுற்றுக்கு செல்வதில் சிக்கல் ஏற்படும். இதனால் சென்னை அணி ஐ.பி.எல்., தொடரில் முதன் முறையாக  ‘பிளே ஆப்’ சுற்றுக்கு செல்ல முடியாமல் வெளியேறும் அபாயம் ஏற்படும். 

14

சென்னை, ராஜஸ்தான் அணிகள் 23 போட்டியில் மோதின. இதில் சென்னை 14, ராஜஸ்தான் 8 ல் வென்றன. இந்த சீசனில் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 16 ரன்னில் தோற்றது.

ஜடேஜா ஏன்

டில்லிக்கு எதிராக ஜடேஜா கடைசி ஓவரை வீசியது குறித்து தோனி கூறுகையில்,‘‘ கடைசி ஓவரை வீசும் அளவுக்கு பிராவோ ‘பிட்’ ஆக இருக்கவில்லை. காயத்தால் வெளியே சென்ற இவர் மீண்டும் மைதானத்துக்கு திரும்ப வரவில்லை. இதனால் கரண் சர்மா, ஜடேஜா என இருவரில் ஒருவர் தான் பந்து வீசியாக வேண்டும். நான் ஜடேஜாவை வீசச் செய்தேன். தவான் கொடுத்த கேட்ச் வாய்ப்புகளை நழுவ விட்டதும்  தோல்விக்கு காரணமாக அமைந்தது,’’ என்றார்.

Advertisement

Source: https://sports.dinamalar.com/2020/10/1603032493/iplcricketchennairajasthandhoniwatson.html