பழிக்குப் பழி.. இந்த கொலையுடன் நிறுத்த மாட்டோம்.. சென்னை வழக்கறிஞர் கொலை வழக்கில் பகீர் வாக்குமூலம் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை வியாசர்பாடி வழக்கறிஞர் ராஜேஷ் கொலை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பழிக்குப்பழியாக கொன்றோம். இந்த கொலையுடன் நிறுத்த மாட்டோம். வெளியே வந்ததும் இன்னும் 3 பேரை கொல்வோம் என அவர்கள் வாக்குமூலம் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை வியாசர்பாடி பி.வி.காலனியில் வசித்து வந்தவர் வழக்கறிஞர் ராஜேஷ், இவருக்கு வயது 45. வழக்கறிஞர். இவரது மனைவி ரம்யா, மக்கள் ஆளும் அரசியல் என்று ஒரு கட்சி நடத்தி வருகிறார். அதில், ராஜேஷ் ஆலோசகராக செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 4ம் தேதி இரவு நேரத்தில் வில்லிவாக்கம் எம்.டி.எச் சாலையில் கள்ளுக்கடை பஸ் ஸ்டாப் அருகே ராஜேஷ் அமர்ந்து இருந்தார். அப்போது ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வந்து ராஜேசை கண் இமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டி கொன்றது. இந்த கொலை தொடர்பாக 8 பேர் வாணியம்பாடி கோர்டில் சரண்டர் ஆகினர். வில்லிவாக்கம் போலீசார், இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.

image234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி.. பாஜகவின் அதிரடி திட்டம்.. அவசர ஆலோசனையில் முடிவு?

இரு கோஷ்டி மோதல்

வியாசர்பாடி வழக்கறிஞர் ராஜேஷ் கொல்லப்பட்டது ஏன் என்பது குறித்து விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்கள் போலீசாரிடம் அளித்த தகவலின் படி, சென்னை வியாசர்பாடி பி.வி.காலனியில் சூழ்ச்சி சுரேஷ், முருகேசன் ஆகியோர் ஒரு அணியாகவும், பிரபல ரவுடி சேராவின் மகன் கதிரவன் மற்றும் தொப்பை கணேஷ் ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகிறார்கள். யார் பெரிய ரவுடி என்பதில் இவர்களுக்குள் அடிக்கடி மோதல் நடந்து வந்துள்ளது

பல கொலைகள்

இதன் காரணமாக, சூழ்ச்சி சுரேஷ் தரப்பை சேர்ந்த இடிமுரசு இளங்கோ 2013ம் ஆண்டும், பழனி 2016ம் ஆண்டும், திவாகர் 2019ம் ஆண்டும் கொலை செய்யப்பட்டனர். இதேபோல், கதிரவன் தரப்பை சேர்ந்த முத்து பாட்ஷா 2013ம் ஆண்டும், ஜப்பான் சரவணன் 2014ம் ஆண்டும், சாலமன், சீனிவாசன் ஆகியோர் 2017ம் ஆண்டும் படுகொலை செய்யப்பட்டனர்.

கதவை மூடி தப்பினார்

தற்போது கொலையான வழக்கறிஞர் ராஜேஷ், கதிரவன் தரப்புக்கு வழக்கறிஞராக செயல்பட்டு வந்திருக்கிறார். இந்த தரப்பில் யார், எந்த வழக்கில் கைது செய்யப்பட்டாலும் உடனுக்குடன் அவர்களை சிறையில் இருந்து வெளியில் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் கதிரவனுடன் சேர்ந்து பல கட்ட பஞ்சாயத்துகளில் ஈடுபட்டு வந்ததாகவும் கொலையாளிகள் வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார்கள். இதனால்,சூழ்ச்சி சுரேஷ் மற்றும் முருகேசனின் செல்வாக்கு குறைந்து விட்டதாம். எனவே ஆத்திரமடைந்த அவர்கள், ராஜேஷை விட்டு வைத்தால் நாம்மை வளரவிட மாட்டார் என கருதி, அவரை வெட்டிக்கொலை செய்ய திட்டமிட்டனர். கடந்த ஓராண்டுக்கு முன்பு முருகேசன் தரப்பு பெரம்பூரில் ராஜேஷை போட்டுத்தள்ள முயன்றபோது, ஒரு வீட்டிற்குள் ஓடி கதவை மூடிக்கொண்டு போலீசாருக்கு தகவல் கூறியிருக்கிறார்

இன்னமும் கொல்வோம்

உடனே போலீசார் அங்கு வந்ததால், அவர் உயிர் தப்பினார். இதுகுறித்து ராஜேஷ் கொடுத்த புகாரின்பேரில், செம்பியம் போலீசார் முருகேசனை கைது செய்தனர். ஆனாலும், முருகேசன் தரப்பினர் ராஜேஷை கொல்ல தொடர்ந்து கண்காணித்து ஸ்கெட்ச் போட்டு வந்துள்ளனர். அதன்படி, சம்பவத்தன்று கடந்த அக்டோபர் 4ம் தேதி இரவு நேரத்தில் வில்லிவாக்கம் எம்.டி.எச் சாலையில் கள்ளுக்கடை பஸ் ஸ்டாப் அருகே ராஜேஷ் அமர்ந்து இருந்தார். அப்போது பயங்கர ஆயுதங்களுடன் வந்து ராஜேசை கண் இமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டி கொன்றனர். “பழிக்கு பழியாக கொன்றோம் என்றும், இந்த கொலையுடன் நிறுத்த மாட்டோம். வெளியே வந்ததும் தொப்பை கணேசன், கதிரவன் மற்றும் மதுரையில் உள்ள சேரா ஆகியோரை கொலை செய்வோம்,” என்றும் அவர்கள் போலீசிடம் வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார்களாம்.

தனிப்படை தீவிரம்

கைதானவர்கள் கொடுத்த தகவலையடுத்து இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக சூழ்ச்சி சுரேஷ், அருண்பாண்டியன் ஆகியோர் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் இவர்களை தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள். இதனிடையே, 4 நாள் போலீஸ் காவல் முடிந்து 8 பேரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் முன்னிலையில் ஆஜர்படுத்தி, பூந்தமல்லி கிளை சிறையில் அடைத்தனர்.

– பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/eight-people-arrested-in-connection-of-chennai-vyasarpadi-lawyer-rajesh-murder-case-400798.html