சென்னை என்பது கிண்டியுடனோ.. அண்ணா நகருடனோ முடியவில்லை.. ஆதங்கத்தில் புறநகர் மக்கள்! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: தமிழக அரசு ‘சரி’ என்று ரயில்வே வாரியத்திடம் சொன்னால் நாளைக்கே சென்னையில் புறநகர் ரயில் சேவை தொடங்கும் என்பது தான் எதார்த்தம். அரசு நினைத்தால் மத்திய அரசிடம் சொல்லி உடனே ரயில்களை பழையபடி இயக்க முடியும். ஆனால் ஏன் செய்ய தாமதிக்கிறது என்பதே, வறுமையில் சிக்கி தவிக்கும் சென்னை வாழ் ஏழை எளிய மக்களின் தவிப்புக்கு உரிய கேள்வியாக உள்ளது.

அரசு உயர் அதிகாரிகளை பொதுமக்களை போல் கூட்ட நெரிசலான சென்னை மாநகர பேருந்துகளில் ஏறி செல்லவைத்தால் என்னபாடு படுகிறார்கள் என்ற உண்மை புரியும். அதேபோல் காசே இல்லாமல் ஆறு மாதம் தவித்த மக்களுக்கு, வேலைக்கு செல்ல பேருந்துகளை விட்ட அரசு, புறநகர் ரயில்களை விட மறுப்பது மிகப்பெரிய முரண்.

கொரோனா தொற்று பரவும் வேகத்தை கட்டுப்படுத்தவும், அதனால் ஏற்படக்கூடிய அபாயத்தை தடுக்கவும்,, தனிமனித இடைவெளியைப் பின்பற்றவும், புறநகர் ரயில்களை விடுவதை அரசு நிறுத்தி வைத்திருக்கிறதாக கூறப்படுகிறது.

புறநகர் ரயில்கள்

ஆனால் கொரோனாவை தடுக்க மிக முக்கியமான பாதுகாப்பு அம்சமான முகக்கவசம் அணிவது, கைகளைச் சோப்பு போட்டுக் கழுவுவது இதை பலர் முறையாக பின்பற்றினாலும், இன்னமும் பலர் இதை பற்றி எதையும் கவலைப்படாமல் பேருந்துகளிலும், சாலைகளிலும் வாகனங்களிலும் பயணிக்கிறார்கள். அதற்காக அரசு பேருந்து பயணத்தையோ, வாகன போக்குவரத்தையோ நிறுத்தவில்லை. அப்புறம் ஏன் புறநகர் ரயில்களை மட்டும் கொரோனா பரவி விடும் என்று நிறுத்தி வைத்திருக்கிறது என்ற கேள்வி எழுப்புகிறார்கள் மக்கள்.

கோயம்பேடு மார்க்கெட் கூட்டம்

ஏன் இன்னும் சொல்லப்போனால் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது என பாதுகாப்பு அம்சங்களுடன் ரயில்களை இயக்க முடிகிற போது, பேருந்துகளை இயக்க முடிகிற போது புறநகர் ரயில்களையும் இயக்க முடியாத என்ற கேள்வி எழுகிறது. சென்னை காசிமேட்டிலும் கோயம்பேட்டிலும் தியாகராய நகரிலும் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி நடந்துதான் செல்கிறார்கள், முககவசம் அணிந்துதான் செல்கிறார்கள் என்று சொல்லிவிட முடியுமா? அங்கெல்லாம் அரசு தடுப்புகளை போடுவது இல்லை என்கிற போது ரயில்களை தடுப்பது நியாயமா என்று சாமானியர்களின் குமுறுகிறார்கள்.

கிண்டியுடன் முடியும் நகரமல்ல

சென்னை என்பது பாரிஸ் கார்னரில் தொடங்கி கிண்டி வரையிலும், அந்த பக்கம் திருவான்மியூர் தொடங்கி அண்ணாநகர் வரையிலும் முடியக்கூடிய நகரம் அல்ல. சென்னை என்பது இந்த பக்கம் செங்கல்பட்டு தொடங்கி அந்த பக்கம் கும்மிடிப்பூண்டி வரையிலும், இன்னொரு புறம் திருத்தணியும், அந்த பக்கம் அரக்கோணம் வரையிலும் மக்களை வாழ வைத்து வரும் பெருநகரம். அதுவரையிலும் சென்னை பரந்து விரிந்துள்ளது என்பதே உண்மை.

ஆயிரம் பாஸ் எடுக்க முடியாது

சுமார் 100 கிலோமீட்டர் சுற்றளவில் வாழும் மக்கள் சென்னையின் மையப்பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்களை வேலை பார்த்து தான் வாழ்வாதாரத்தை ஓட்டி வந்தார்கள். இவர்கள் வாங்கும் சம்பளத்திற்கு தினசரி 100க்கணக்கான ரூபாயை பேருந்து கட்டணமாக கொடுக்க முடியாது. அதேபோல் பல மணி நேரம் பேருந்துகளில் வந்து பயணம் செய்து வேலை செய்யும் இடத்தை அடையவும் முடியாது. அதற்கு உரிய பேருந்து வசதிகளும் சென்னையில் அந்த அளவிற்கு விடப்படவில்லை என்பதும் கள உண்மையாகும்.

செங்கல்பட்டு தாம்பரம்

திருவள்ளூர்-அம்பத்தூர் வழித்தடத்தில் பேருந்துகள் போதிய அளவில் இயக்கப்படவில்லை. முன்பு போல் தாம்பரம் செங்கல்பட்டு வழித்தடத்தில் பேருந்துகள் இல்லை என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும். ஒட்டுமொத்தமாக சென்னையின் மையப்பகுதிகளில் இருந்து புறநகருக்கும் போதிய பேருந்துகள் கொரோனா முடக்க தளர்வுக்கு பின்னர் இயக்கப்படவில்லை

பிடிவாதம் காட்டிய அரசு

இப்படியாக நிலைமை இருக்க புறநகரில் வசிக்கும மக்கள் வாழ்வாதாரத்தை தொலைத்துவிட்டு பல மாதங்கள் வீடுகளில் முடங்கி இருக்க இயலுமா? ஏற்கனவே இபாஸ் விவகாரத்தில் கடுமையாக பிடிவாதம் காட்டிய தமிழக அரசு வலுவான கோரிக்கைக்கு பிறகே இபாஸை ரத்து செய்தது. அதன்பிறகு மாவட்டம் விட்டு மாவட்ட போக்குவரத்தையும் ஒரு வாரம் கழித்தே அனுமதித்தது. ஆனால் சென்னையில் புறநகர் ரயில் சேவைக்கு மட்டும் இன்று வரை அனுமதி கொடுக்கவில்லை.

அரசு பரிசீலிக்க வேண்டும்

150 ரூபாய் பாஸ் எடுத்து வேலைக்கு சென்று வந்தவர்கள் இன்னமும் எத்தனை மாதம் ஆயிரம் ரூபாய் எடுத்து வேலைக்கு போக முடியும். இப்போது தான் மக்கள் கடந்த ஆறுமாத முடக்கத்தில் இருந்து மீண்டு வருகிறார்கள். எனவே தமிழக அரசு கனிவுடன் பரிசீலித்து, புறநகர் ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்பதே சென்னை வாழ் மக்களின் ஒரே கோரிக்கையாக உள்ளது.

– பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/when-will-the-suburban-train-service-resume-in-chennai-400909.html