வாடிக்கையாளர்கள் கூட்டம்.. தி நகர் குமரன் சில்க்ஸ் கடைக்கு சீல்.. சென்னை மாநகராட்சி நடவடிக்கை – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: அதிக அளவுக்கு வாடிக்கையாளர்கள் கூட்டம் சேர்ந்தது தடுக்காததை, காரணம் காட்டி, சென்னை தி நகரில் உள்ள குமரன் சில்க்ஸ் கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

கொரோனா பரவாமல் தடுக்க சமூக இடைவெளி, சானிட்டைசர் வழங்குவது உள்ளிட்ட உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று வணிக நிறுவனங்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. ஆனால் இந்த உத்தரவை முறையாக பின்பற்றாமல் வாடிக்கையாளர்கள் சில கடைகளில் அதிகமாக கூடுவதாக புகார்கள் வந்தன.

எனவே விதிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்டவற்றை கண்டறிந்து சீல் வைக்க தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அதிகாரி தலைமையிலான குழுவினர் நேரடியாக கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றன.

சீல் வைப்பு

இந்த நிலையில்தான் தி நகர் பகுதியில் உள்ள குமரன் சில்க்ஸ் கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர். இன்று காலை கடை திறந்து இருந்த நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் நேரில் சென்று பார்த்து அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களை வெளியேற்றி ஷட்டரை இழுத்து மூடி அதன்மீது சீல் வைத்தனர்.

ஏற்கனவே நடவடிக்கை

ஏற்கனவே சென்னை நகரில் சில முன்னணி ஜவுளிக் கடைகளை சீல் வைத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர். பிறகு அவர்கள் முறையீடு செய்து உரிய சமூக இடைவெளியை கடை பிடிப்பதாக உறுதி அளித்த பிறகுதான் கடைகள் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பிற மாநகராட்சிகள்

இந்த வகையில், சென்னை மாநகராட்சி வித்தியாசமாக செயல்பட்டு வருகிறது. பிற மாநகராட்சிகள் இந்த அளவுக்கு கடுமை காட்டுவதில்லை. பெங்களூரில் கூட்டம் கூடுவதை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பண்டிகை காலம்

இது பண்டிகை காலம். எனவே ஜவுளிக் கடைகளில், மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே மாநகராட்சி அதிகாரிகள் இனிமேல் தங்கள் கெடுபிடிகளை அதிகரிப்பார்கள் என்பதால் அனைத்து கடைகளும் உரிய பாதுகாப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

– பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-kumaran-silks-shop-sealed-by-corporation-400897.html