சென்னை: சென்னையில் நேற்று பெய்ய தொடங்கிய மழை இரவிலும் கொட்டி தீர்த்தது. இன்றும் சென்னையில் மழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னையில், இந்த வருடத்திலேயே ஒரே நாளில் அதிகபட்சம் மழை பதிவாகியது நேற்றுதான் என்று வானிலை இலாகா புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் நேற்று மாலை முதல் மழை பெய்தது. சில பகுதிகளில் இரவிலும் மழை தொடர்ந்தது. இதனால் நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு.. 20க்குப் பிறகு வடகிழக்கு பருவமழை.. வானிலை மையம்
சாதனை மழை
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி நேற்று ஒரே நாளில் 65 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அதுவும் மாலையில் வெறும் 2 மணி நேரத்தில் இந்த அளவு மழை பெய்துள்ளது. இந்த வருடத்தின் ஒரே நாளில் பெய்த அதிகபட்ச மழை இதுவாகும். அதாவது சுமார் 7 செ.மீ மழை 2 மணி நேரத்தில் பெய்துள்ளது. 1 மணி நேரத்தில் 50 செ.மீ மழை பெய்தபோதுதான், 2015ம் ஆண்டு சென்னை பெரு வெள்ளம் ஏற்பட்டது நினைவிருக்கலாம். அதேநேரம், நேற்று இரவில் புறநகரில் பெய்த மழையையும் சேர்த்தால் இந்த மழை பதிவு அளவு இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மழை தொடரும்
வானிலை ஆய்வு மைய அதிகாரி புவியரசன் இதுபற்றி கூறுகையில், மழை மற்றும் இடி போன்றவை, அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு வட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளார். தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறுகையில், கடந்த முறை போல இல்லாமல் நேற்று சென்னையை மையமாக வைத்துதான் நேற்று மழை பெய்தது. எனவேதான் அதிக மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த மழை வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளிலும் தொடரக் கூடும் என்று தெரிவித்துள்ளார்.
ஏரியா வாரியாக மழை பதிவு
நேற்றைய மழை பதிவு ஏரியாவுக்கு ஏரியா வித்தியாசப்பட்டு உள்ளது. உதாரணத்துக்கு புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, செம்பரம்பாக்கம் போன்றவற்றில், 9 மில்லி மீட்டர் அளவுக்கு மட்டுமே மழை பதிவாகி உள்ளது. சென்னையின் மையப்பகுதியான, முகப்பேர், நுங்கம்பாக்கம், அண்ணாநகர், கேகே நகர் மற்றும் ராயப்பேட்டை ஆகியவற்றில் சுமார் 60 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதேபோன்றுதான் இன்றும் நாளையும் மழை தொடரும் என்கிறார் பிரதீப் ஜான்.
இன்று மழை தொடரும்
சென்னை மட்டுமல்லாது, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர் மற்றும் வட கடலோர தமிழக பகுதிகள் புதுச்சேரி ஆகிய பகுதிகளிலும் அடுத்த இரு நாட்களுக்கு மழை பொழிவு இருக்கக்கூடும். நேற்றைவிட இன்று சென்னையில் அதிக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை வெள்ளம்
வடகிழக்கு பருவமழை தொடங்காத நிலையில் இந்த ஆண்டில் இல்லாத அளவுக்கு அதிகமான மழை நேற்று சென்னையில் பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை துவங்கியதும், மழைப்பொழிவு இன்னும் பல மடங்கு அதிகரிக்கும். ஒரு நாள் மழைக்கே தத்தளிக்கும் சென்னை, வடகிழக்கு பருவமழையை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்ற கேள்விகளை எதிர் கட்சியினர் எழுப்ப ஆரம்பித்துள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக வடிகால் விவகாரத்தில் அரசு மற்றும் மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.
– பதிவு இலவசம்!
Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-received-highest-single-day-rain-this-year-65-mm-rain-in-2-hrs-401142.html