சென்னை காவல்துறையின் புதிய முயற்சி: முன்னாள் இளஞ்சிறார்களுக்கு தொழிற்பயிற்சி – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை காவல்துறை புதிய முயற்சியாக குற்றச்செயல்களில் ஈடுபட்டு மனந்திருந்திய சென்னை காவல்துறையின் புதிய முயற்சி: முன்னாள் இளஞ்சிறார்களுக்கு அரசு சார்பில் தொழிற்பயிற்சியுடன் பணியில் அமர்த்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக 19 முன்னாள் இளஞ்சிறார்களுக்கு ஓட்டுநர் பயிற்சியினை காவல் ஆணையர் இன்று தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து சென்னை காவல்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளுக்கான திட்டங்கள் மூலம் பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக குற்றச் செயல்களில் ஈடுபடும் இளஞ்சிறார்கள் மேலும் குற்றங்களில் ஈடுபடாமல் அறவே தடுத்து, அவர்களை நல்வழிப்படுத்தி, அறிவுரைகள் வழங்கி தகுந்த தொழில் பயிற்சியுடன் பணியில் அமர்த்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் மாவட்டத் துணை ஆணையாளர்களுக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில், சென்னை பெருநகரில் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட முன்னாள் இளஞ்சிறார்களுக்காக அடையாறு மாவட்டத்தில் சிறப்புத் தொழில் நெறி வழிகாட்டல் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது கடந்த செப். 21 அன்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் விஷ்ணு, கிண்டி, மாநிலத் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் தொடங்கி வைக்கப்பட்டு பயிற்சி வகுப்புகள் நடத்தி 100 முன்னாள் இளஞ்சிறார்கள் பயன்பெற்றனர்.

மேலும் இதன் தொடர்ச்சியாக வாகன ஓட்டுநர் பயிற்சி பெற 19 முன்னாள் இளஞ்சிறார்கள் விருப்பம் தெரிவித்து இருந்தனர். மாநிலத் தொழில் நெறி வழிகாட்டு மையம் மற்றும் சென்னை பெருநகர காவல் துறை இணைந்து, சாலை போக்குவரத்து நிறுவனம் மூலம் முன்னாள் இளஞ்சிறார்களுக்கான கட்டணமில்லா, இலகு ரக வாகன ஓட்டுநர் திறன் பயிற்சி தொடக்க விழா இன்று (27.10.2020) நடைபெற்றது.

இவ்விழாவில் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், கலந்து கொண்டு கொடியசைத்து இலகு ரக வாகன ஓட்டுநர் பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்தார். இப்பயிற்சி வகுப்பில் 19 முன்னாள் இளஞ்சிறார்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இப்பயிற்சியின் முடிவில் பயிற்சி பெறும் நபர்களுக்கு வாகன ஓட்டுநர் உரிமம் (LMV License) வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் விஷ்ணு, அடையாறு துணை ஆணையர் விக்ரமன், வேலைவாய்ப்பு பயிற்சித் துறை அதிகாரிகள், பயிற்றுநர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் இளஞ்சிறார்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/595307-new-initiative-of-chennai-police-vocational-training-for-ex-offenders.html