சென்னை ராயப்பேட்டையில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை ராயப்பேட்டையில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சென்னை, 

சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரி அருகே உள்ள பார்டர் தோட்டம் பகுதியில் பழைய 5 மாடி கட்டிடம் ஒன்று இருந்தது. இந்த கட்டிடம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி. ஒருவருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. அவருக்கும், இந்த கட்டிடத்தை விற்பனை செய்தவருக்கும் இடையே பிரச்சினை இருந்ததாகவும், இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால், இந்த 5 மாடி கட்டிடம் பராமரிப்பு இல்லாமல் இருந்துள்ளது. கட்டிடத்தின் பெரும் பகுதியில் யாரும் வசிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால், தரைத்தளத்தில் மட்டும் பெண் ஒருவர் தனது குழந்தையுடன் வசித்ததாக தெரிகிறது. மேலும், காவலாளி ஒருவரும் அங்கு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு 8 மணி அளவில் இந்த 5 மாடி கட்டிடம் பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது. சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். மயிலாப்பூர், எழும்பூர், எஸ்பிளனேடு, தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த வீரர்கள் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு துறை இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரனும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார்.

அதிர்ஷ்டவசமாக இடிபாடுகளில் யாரும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது. காவலாளி மற்றும் குழந்தையுடன் இருந்த பெண் நேற்று சம்பவ இடத்தில் இல்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். எனவே, உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. சரக்கு வாகனம் ஒன்று சேதம் அடைந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு ராயப்பேட்டை போலீஸ் உதவி கமிஷனர் லட்சுமணன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து விசாரணையில் ஈடுபட்டனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Source: https://www.dailythanthi.com/News/TopNews/2020/10/27042619/5-storey-building-collapses-in-Raipet-Chennai.vpf