பிரதீபா, கண்ணன், இப்போ லோகேஷ்.. சென்னையில் அடுத்தடுத்து மருத்துவ மாணவர்கள் பலி.. என்ன நடக்கிறது? – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மாணவர் லாட்ஜ் ரூமில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மருத்துவ மாணவர்கள் தற்கொலை தொடர்வதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள வனவாசி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் மகன் லோகேஷ் குமார் (24). இவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு, அங்கு முதுநிலை மருத்துவ படிப்பு முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா வார்டில் லோகேஷ் குமார் பணி செய்து வந்தார்.கடைசியாக கடந்த 14ம் தேதி கொரோனா பணியில் ஈடுபட்டார்.

லாட்ஜ் அறை

7 நாட்கள் பணி, 7 நாட்கள் தனிமைப்படுத்துதல் என்பது விதிமுறையாக இருப்பதால், மருத்துவமனை நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த தி நகர் தனியார் ஓட்டலில் கடந்த ஏழு நாட்களாக தன்னை அவர் தனிமைப் படுத்திக் கொண்டிருந்தார். கடந்த 25ம் தேதி லோகேஷ் குமார் அவரது தந்தையை செல்போனில் தொடர்பு கொண்டு, கொரோனா வார்டில் பணி செய்து வருவதால், மிகுந்த மன உளைச்சல் உண்டாகிறது என்று கூறியுள்ளார்.

செல்போன் எடுக்கவில்லை

இந்த நிலையில், நேற்று முன்தினம் லோகேஷின் பெற்றோர், அவரை செல்போனில் தொடர்பு கொண்டனர். ஆனால் வெகு நேரமாக போனை எடுக்கவில்லை. எனவே, சந்தேகமடைந்த அவர்கள், ஹோட்டல் நிர்வாகத்தை தொடர்புகொண்டு பேசினர். பின்னர் ஹோட்டல் ஊழியர்கள் மாற்றுச் சாவி மூலம் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். லோகேஷ் அப்போது வாந்தி எடுத்த நிலையில் இறந்து கிடந்துள்ளார்.

விஷம் குடித்து தற்கொலை

இவர் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் உடற்கூறு ஆய்வுகள் முடிந்த பிறகுதான், லோகேஷ் இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று சென்னை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் பணிச்சுமையால் முதுநிலை மருத்துவ மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதால், லோகேஷும் இப்படித்தான் மன உளைச்சலால் தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மாணவி தற்கொலை

கொரோனா வார்டில் பணியாற்றிய மருத்துவ மாணவர்கள் இறப்பது இது முதல் முறையல்ல. கடந்த ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இரண்டாம் ஆண்டு, மருத்துவ மாணவி பிரதீபா, தங்கும் அறையில் இறந்து கிடந்தார். இரண்டு மாதமாக வீட்டுக்கு போகாமல் பணியில் இருந்த இவர் மன உளைச்சலால் உயிரிழந்தார்.

மாடியிலிருந்து குதித்து

ஜூலை 20-ஆம் தேதி ஸ்டான்லி மருத்துவமனை முதுநிலை மருத்துவ மாணவர் கண்ணன், அவர் தங்கும் விடுதியில் இருந்து கீழே குதித்து உயிர் இழந்தார். உடுமலைப் பேட்டையைச் சேர்ந்த இவருக்கு திருமணம் பேசப்பட்ட நிலையில் இவரது மரணம் நேர்ந்தது.

பணிச்சுமை

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஒரு நாள் 6 மணி நேரம் வழங்கப்படும் நிலையில் சென்னை மருத்துவக் கல்லூரியோடு இணைந்த பல மருத்துவமனைகளிலும் மருத்துவக் கல்லூரிகளிலும் 12 மணி நேரம் பணி வழங்கப்படுவதாக சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் குற்றம் சாட்டுகிறது. எனவேதான் அவர்கள் மன உளைச்சலில் இருப்பதாக கூறப்படுகிறது. இக் காலகட்டத்தில் இறந்த அனைத்து பயிற்சி மருத்துவர்கள், பட்டமேற்படிப்பு மாணவர்களின் குடும்பங்களுக்கும் தலா 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அந்த சங்கம் வலியுறுத்தியுள்ளது.

– பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-rajiv-gandhi-medical-college-student-commits-suicide-in-lodge-room-401560.html