வடகிழக்குப் பருவமழை தொடங்கிய முதல்நாளே சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்தது.
வடகிழக்குப் பருவமழை நேற்று தொடங்கிவிட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. சென்னை, அதன் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் 6 மணி நேரமாகப் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதனால், அண்ணா சாலை, ராதாகிருஷ்ணன் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கியது. சாலைகள் பல இடங்களில் வெள்ளக்காடானது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
நள்ளிரவு முதல் பெய்த கனமழையால் சென்னை திருவல்லிக்கேணியில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதனால், குடியிருப்புவாசிகள் வீடுகளைவிட்டு வெளியே வர முடியாமல் முடங்கினர். ராயப்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி, கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் சுரங்கப்பாதைகளிலும் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.
Source: https://www.vikatan.com/news/tamilnadu/heavy-rain-in-chennai-water-logged-in-main-roads