ஊரடங்கு தளர்வில் மெரினா கடற்கரையில் அனுமதி இல்லை: சென்னை மக்கள் ஏமாற்றம் – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

ஊரடங்கு தளர்வில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மெரினா கடற்கரை, சுற்றுலாத் தளங்கள் திறப்பு குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் சென்னை மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், உயர் நீதிமன்றமே கேள்வி எழுப்பிய மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி குறித்து அறிவிக்கப்படவில்லை. மாறாக, கடற்கரை, சுற்றுலாத் தளங்களுக்குப் பொதுமக்களை அனுமதிப்பதில் தடை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பண்டிகைக் காலங்களில், வார விடுமுறை நாட்களில், மாலை நேரங்களில் பொதுமக்கள் பெரிதும் கூடும் இடங்கள் மெரினா, எலியட்ஸ் கடற்கரை, சுற்றுலாத் தளங்கள், திரையரங்குகள் ஆகியவை ஆகும். இதில் திரையரங்குகளைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி கிடைக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்ட அறிவிப்பு:

”தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்த விதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாகக் கடைப்பிடிக்கப்படும்.

* நீச்சல் குளங்கள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு அனுமதி இல்லை.

* மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.

* வெளி மாநிலங்களிலிருந்து (புதுச்சேரி மாநிலம் தவிர) தமிழ்நாட்டிற்குள் வருபவர்களுக்கும், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு செல்பவர்களுக்கும் தற்போது நடைமுறையிலுள்ள இ-பதிவு முறை, தொடர்ந்து அமல்படுத்தப்படும்.

* தமிழ்நாட்டில் கரோனா பரவல் குறைந்து வரும் சூழல் நீடிக்கவும், அதனை முழுமையாகத் தடுக்கவும், நாம் அனைவரும் தொடர்ந்து பாடுபட வேண்டும். குறிப்பாக நோய்த்தொற்று குறைந்துள்ள நிலையில், பொதுமக்கள் பண்டிகைக் காலங்களில் அதிகமாகக் கூடுவதைத் தவிர்த்து, விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

* பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் முகக்கவசத்தைக் கட்டாயம் அணிய வேண்டும்

இத்தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/596817-no-opening-of-marina-beach-due-to-curfew-chennai-people-disappointed.html