தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குற்றச்செயல்களை தடுக்க சென்னையில் 12 தனிப்படை அமைப்பு: சென்னை காவல் ஆணையர் நடவடிக்கை – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

தீபாவளியையொட்டி குற்றச்செயல்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் சென்னையில் 12 காவல் மாவட்ட துணை ஆணையர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் தீபாவளியையொட்டி புத்தாடைகள், இனிப்பு வகைகள், பட்டாசுகள் வாங்க தியாகராய நகர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அலைமோதும். இந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக தனிமனித இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. இதனால், தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தைவிட குறைவான மக்களே புத்தாடைகளை வாங்கிச் செல்கின்றனர். இருப்பினும் இவர்களை குறிவைத்து கடைவீதிகளில் சுற்றித்திரியும் கொள்ளையர்கள் பிக்பாக்கெட் உள்ளிட்ட திருட்டு சம்பவங்களில் ஈடுபட வாய்ப்புள்ளதாக உளவுத்துறை போலீஸார் எச்சரித்துள்ளனர்.

இதையடுத்து தியாகராய நகர், அடையாறு, மயிலாப்பூர், வண்ணாரப்பேட்டை, பரங்கிமலை உள்ளிட்ட 12 காவல் மாவட்ட போலீஸாரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். தீபாவளியையொட்டி எந்த விதமான குற்றச்செயல்களும் நடைபெறக் கூடாது என காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அறிவுறுத்தியுள்ளார்.

இதையடுத்து அனைத்து காவல் மாவட்ட துணை ஆணையர்கள் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படை போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகள், செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/598440-chennai-commissioner.html