சென்னை யானைக்கவுனியில் பயங்கரம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொலை – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை யானைக்கவுனியில் சொத்துப் பிரச்சினையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கொலை செய்தது யார், ஒருவரா? பலரா? என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை யானைக்கவுனி விநாயகர் மேஸ்திரி தெருவில் வசித்தவர் தலில் சந்த் (74), இவரது மனைவி புஷ்பா பாய் (70) இவர்களுக்கு ஷீத்தல் (38) பிங்கி (35) என்கிற மகன், மகள் உள்ளனர். சொந்தமாக ஃபைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று மாலை மூவரும் தங்கள் வீட்டில் இருந்துள்ளனர். மகள் பிங்கி வெளியில் சென்றுள்ளார்.

இரவு சுமார் 7 மணி அளவில் பிங்கி வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் படுக்கையறையில் தாய், தந்தை, அண்ணன் துப்பாக்கியால் சுடப்பட்டு ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடப்பதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக போலீஸுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

தகவல் கிடைத்து யானைக்கவுனி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். போலீஸார் அங்கு சென்ற பின்னர்தான் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கே தகவல் தெரிந்துள்ளது. கொலையை ஒருவர் செய்தாரா? அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் செய்தார்களா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அக்கம் பக்கத்தவருக்கு சத்தம் கேட்காமல் துப்பாக்கியால் சுட்டு கொலை நடந்துள்ளது என்றால் திட்டமிட்ட கொலையாக இருக்கவே வாய்ப்பு, சைலன்ஸர் துப்பாக்கி அல்லது சத்தமாக தொலைக்காட்சியை வைத்து கதவி பூட்டிவிட்டு கொலை செய்திருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர்.

வீட்டுக்குள் அவர்கள் எளிதாக நுழைந்துள்ளதால் அறிமுகமான நபர் அல்லது உறவினராக இருக்கலாம். திட்டமிட்டு கொலை செய்தபின்னர் தப்பிச் சென்றுள்ளனர். மூவரும் போராடியதற்கான அறிகுறி இல்லாததால் துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர்.

வெளியில் மழை பெய்து தண்ணீர் தேங்கியிருந்த நிலையில் வெளியில் வேறு தடயங்களை சேகரிக்க முடியவில்லை. கொலை நடந்த வீட்டுக்குள் தடயவியல் நிபுணர்கள் துப்பாக்கி குண்டுகள் உள்ளிட்ட மற்ற தடயங்களை சேகரித்தனர்.

உயிரிழந்த மூவர் உடலும் பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது.

யானைக்கவுனியும் துப்பாக்கிச்சூடு கொலைகளும்:

சென்னையில் துப்பாக்கிச் சூடு கொலைகள் நடந்தது யானைக்கவுனியில் இது முதன்முறை அல்ல ஏற்கெனவே கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 2-ம் தேதி எலக்டிரிக்கல் மொத்த வியாபாரி ஆசிஷ்சர்மா (50) என்பவர் யானைக்கவுனி தங்கும் விடுதியில் தங்கியிருந்தபோது, மர்மான முறையில், துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார். அவரது உறவினரே அவரை கொலை செய்தது தெரியவந்தது.

இதேப்போன்று 2016-ம் ஆண்டு மே மாதம் 3-ம் தேதி பட்டப்பகலில் சென்னை சவுகார்பேட்டையில் டிராவல்ஸ் அதிபர் பாபுசிங் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் ராகேஷ் என்பவனை 25 நாட்கள் கழித்து போலீஸார் கைது செய்தனர்.

தற்போது மூன்றாவது கொலையாக மூன்று பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/600826-terror-in-chennai-elephant-gate-3-members-of-the-same-family-shot-dead.html