தமிழகக் கடலோரப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவல்:
“தமிழகக் கடலோரப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், காரைக்கால், டெல்டா மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
அடுத்த 48 (12.11.2020) மணி நேரத்திற்கு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, புதுச்சேரி, காரைக்கால், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். ஏனைய உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அவ்வப்போது ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அவ்வப்போது கனமழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம் எதுவும் இல்லை.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் தமிழகம், புதுவை கடலோரப் பகுதிகளில் வீசக்கூடும். அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்”.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Source: https://www.hindutamil.in/news/tamilnadu/600761-atmospheric-mantle-cycle-heavy-rains-in-north-coast-districts-including-chennai-for-2-days-meteorological-center.html