சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் இடியுடன் கனமழை பெய்யும்… குஷி அறிவிப்பு – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் உள் மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழை பல மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பெய்வதால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. கடந்த 2 நாட்களாக வறண்ட வானிலையே நிலவியது. இரண்டு நாட்கள் ஓய்வுக்குப் பிறகு நாளை முதல் மழை மீண்டும் தீவிரமடையப்போகிறது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மிதமான மழை

தமிழக கடலோர பகுதியில் நிலவும் கிழக்கு திசை காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும்.

4 மாவட்டங்களில் மழை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக கனமழை பெய்யும்

நவம்பர் 12ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுவை, காரைக்கால், மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும். உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.

மீனவர்களுக்கு அறிவிப்பு

இன்று தென் தமிழக கடலோரப் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு கவனமுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். நாளை தமிழக கடலோர பகுதி மற்றும் குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

– பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-tiruvallur-kanchipuram-and-chengalpattu-will-receive-heavy-rains-402772.html