ஜெயமாலாவும் அவரின் சகோதரர் விலாஷ் உட்பட மூன்று பேர் போலீஸ் பிடியிலிருந்து புத்திச்சாலித்தனமாகத் தப்பிய தகவல் வெளியாகியிருக்கிறது.
இது குறித்து நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், “சௌகார்பேட்டையில் மூன்று பேரைக் சுட்டுக் கொலை செய்துவிட்டு அனைவரும் காஞ்சிபுரத்துக்கு காரில் சென்றிருக்கின்றனர். பின்னர்தான் இரண்டு கார்களில் அவர்கள் தப்பியிருக்கிறார்கள். ஆனால், தனிப்படை போலீஸார் ஒரே ஒரு காரை மட்டுமே பின்தொடர்ந்து சென்று கைலாஷ் உட்பட மூன்று பேரைக் கைதுசெய்திருக்கின்றனர். அதனால், ஜெயமாலா, அவரின் சகோதரர் விலாஷ் ஆகியோர் அடிக்கடி காரை மாற்றி வட மாநிலங்களில் சுற்றிவந்திருக்கின்றனர்.
இந்தச் சமயத்தில்தான் தனிப்படை போலீஸாருக்கு ஒரு ரகசியத் தகவல் கிடைத்தது. ஜெயமாலாவுக்கும் அவரின் சகோதரருக்கும் மகராஷ்டிராவைச் சேர்ந்த விலாஷின் நண்பர் ஒருவர் உதவி செய்த தகவல் கிடைத்ததும், அவரின் செல்போன் நம்பரை சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் கண்காணித்தோம். அப்போது புதுப் புது செல்போன் நம்பர்களிலிருந்து விலாஷ், அந்த நண்பருடன் பேசிய தகவல் கிடைத்தது. மேலும், அந்தச் செல்போன் நம்பர் மகராஷ்டிரா, குஜராத் ஆகிய இடங்களைக் காட்டியது. அங்கு சென்றபோது ஜெயமாலா, அவரின் சகோதரர் விலாஷ் ஆகியோர் தப்பிச் சென்றுவிட்டனர். இந்தச் சமயத்தில்தான் ஜெயமாலா, விலாஷின் புதிய செல்போன் நம்பரின் சிக்னல் டெல்லி ஆக்ரா பகுதியைக் காட்டியது. உடனடியாக வாட்ஸ்அப் மூலம் டெல்லி போலீஸாருக்கு தகவல் கொடுத்து, அவர்களைச் சுற்றி வளைத்தோம். வழக்கமாக போலீஸார்தான் குற்றவாளிகளை செல்போன் நம்பர் சிக்னல் மூலம் கண்டறிவார்கள். ஆனால், ஜெயமாலாவின் சகோதரர் விலாஷ், வழக்கறிஞர் என்பதால் சென்னை தனிப்படை போலீஸாரின் செல்போன் நம்பர்களின் சிக்னல் மூலம் தப்பி வந்திருக்கிறார். இருப்பினும் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அவர்களைக் கைதுசெய்திருக்கிறோம். அவர்களிடமிருந்து 10 சிம்கார்டுகள், ஐந்து செல்போன்களைப் பறிமுதல் செய்திருக்கிறோம” என்றார்.
Source: https://www.vikatan.com/news/crime/chennai-special-team-police-secured-3-murder-case-accused-in-delhi