நாளை சென்னை வரும் அமித் ஷா.. எல்லாரும் வாங்க.. அதிமுக எம்எல்ஏக்களுக்கு கறார் உத்தரவு – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாளை சென்னை வருகிறார். அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அவர், பாஜக நிர்வாகிகள் கூட்டத்திலும் பங்கேற்கிறார். அமித் ஷா பங்கேற்கும் அரசு விழாவில் அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அனைவரும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.

பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா நாளை (சனிக்கிழமை) சென்னை வருகிறார். சென்னை கலைவாணர் அரங்கில் நாளை மாலை 4.30 மணிக்கு திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய் கண்டிகையில் ரூ.380 கோடியிலான புதிய நீர்த்தேக்க திட்டத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க உள்ளார்.

அத்துடன் ரூ.61843 கோடி மதிப்பிலான சென்னை மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

அதிமுக எம்எல்ஏக்கள்

இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கும் அரசு விழா என்பதால் அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அனைவரும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்ற அதிமுக மேலிடம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்க முடிவு செய்துள்ளனர்.

வளர்ச்சி திட்டங்கள்

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் கூட இல்லாத நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு கிடப்பில் கிடந்த பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ஏராளமான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம் என்பதை மக்களிடம் காட்டி வாக்கு கேட்க முடியும் என்பதால் அதிரடியாக இறங்கி உள்ளது.

வேல் யாத்திரை

அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜக, தன் பங்கிற்கு தமிழகத்தில் என்னவெல்லாம் செய்யமுடியுமோ அத்தனை விஷயங்களையும் செய்து வருகிறது. பிரபலங்களை கட்சியில் சேர்ப்பது, இளம் தலைவர்களை ஊக்கப்படுத்துவது, நாள் தோறும் வேல் யாத்திரை உள்பட களபணிகளில் ஈடுபடுவது, சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருப்பது என பாஜக தீவிரமாக உள்ளது.

அமித் ஷா திறந்து வைக்கிறார்

இந்த சூழலில் தமிழக அரசு அண்மையில் முடித்த பல்வேறு முக்கியமான வளர்ச்சி திட்டஙக்ளை உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வைத்து திறப்பு விழா நடத்த முடிவு செய்தது. இந்த விழாவில் பங்கேற்க அமித்ஷாவும் ஒப்புக்கொண்டார். இதன்படியே நாளை அரசு விழாவில் பங்கேற்கிறார. அமித்ஷா திறந்து வைக்கப்போகும் திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய்கண்டிகை புதிய நீர்தேக்கம் என்பது சென்னைக்கு மிக முக்கியமானது. சென்னைக்கு குடிநீர் வழங்க 75 ஆண்டுக்கு பின் புதிதாக இரண்டு ஏரிகளை இணைத்து உருவாக்கப்பட்டதாகும். இதன் மூலம் 500 மில்லியன் கனஅடி நீரை சேமிக்க முடியும். இதைத்தான் அமித்ஷா திறந்து வைக்க உள்ளார்.

எம்எல்ஏக்கள் பங்கேற்க உத்தரவு

இதனிடையே அமித்ஷா பங்கேற்கும் அரசு விழாவில் அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அனைவரும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்ற அதிமுக மேலிடம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்க முடிவு செய்துள்ளார்கள். அரசியல் ரீதியாகவும் நாளை முக்கிய சந்திப்புகள் நடக்க வாய்ப்பு உள்ளது,.

– பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/aiadmk-directed-all-ministers-mlas-to-attend-amit-shah-function-403602.html