சென்னை வந்தார் அமித் ஷா; உற்சாக வரவேற்பு – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய அமித் ஷாவை, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.

சென்னை விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த உள்துறை அமைச்சருக்கு பாஜக மற்றும் அதிமுக தொண்டர்கள் இணைந்து வரவேற்பளித்தனர்.

சென்னை விமான நிலையத்திலிருந்து நட்சத்திர விடுதிக்கு காரில் சென்று கொண்டிருந்த அமித் ஷா, சாலையின் இருபக்கமும் நின்றிருந்த தொண்டர்களைப் பார்த்ததும், காரிலிருந்து இறங்கி, சாலையில் நடந்தபடி, தன்னை வரவேற்க நின்றிருந்தவர்களுக்கு கைகளை அசைத்தும், வணக்கம் தெரிவித்தும் வரவேற்பை ஏற்றுக் கொண்டார்.

அவருடன் பாஜக மாநில தலைவர் எல். முருகன் மற்றும் நிர்வாகிகளும் சாலையில் நடந்து செல்ல, அவரது பாதுகாப்புக்கு வந்திருந்த வாகனங்கள் கிண்டிப் பகுதியில் அமித் ஷாவுக்குப் பின்னால் அணிவகுத்தன. பிறகு காரில் ஏறி, தனியார் நட்சத்திர விடுதிக்குப் புறப்பட்டார்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, சென்னையில் இன்று நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறாா். 

இதையும் படிக்கலாமே.. 7.5% ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்: முதல்வர் பழனிசாமி

இதற்காக அவா், புது தில்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்துக்கு இன்று நண்பகலில் சென்னை வந்தார். அங்கிருந்து காா் மூலம் பட்டினப்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதிக்கு செல்கிறாா். 

அங்கு மதிய உணவை முடித்து, சிறிது நேர ஓய்வுக்கு பின்னா் சில தனியாா் நிகழ்ச்சிகளில் அவா் பங்கேற்கிறாா். சில முக்கிய பிரமுகா்களை சந்திக்கிறாா். 

இதைத் தொடா்ந்து, திருவல்லிக்கேணி கலைவாணா் அரங்கத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று, பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்கிறாா். பின்னா் அன்று இரவு நட்சத்திர விடுதியில் தங்கும் அமித் ஷா, ஞாயிற்றுக்கிழமை காலை மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் சென்று, அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் புது தில்லிக்கு புறப்பட்டுச் செல்கிறாா்.

7 ஆயிரம் காவலர்கள்: மத்திய அரசில் பிரதமா் நரேந்திர மோடிக்கு அடுத்த அதிமுக்கிய நபராகக் கருதப்படும் அமித் ஷாவுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. அவரின் வருகையையொட்டி, சுமாா் 7 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

மீனம்பாக்கம் பழைய விமான நிலையம், பட்டினப்பாக்கம் நட்சத்திர விடுதி, கலைவாணா் அரங்கம் ஆகியவற்றில் ஐந்தடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து பட்டினப்பாக்கம் நட்சத்திர விடுதி வரையில் 10 அடிக்கு ஒரு காவலா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகிறாா்.

Source: https://www.dinamani.com/tamilnadu/2020/nov/21/amit-shah-came-to-chennai-enthusiastic-welcome-3508411.html