மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வருகை.. உஷார் நிலையில் போலீஸார் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: மத்திய உள்துறை அமித்ஷா இன்று மதியம் 1 மணிக்கு சென்னைக்கு வருகிறார். இங்கு அவர் ரூ 62 ஆயிரம் கோடியில் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைக்கவுள்ளார்.

2 நாட்கள் பயணமாக வரும் அமித்ஷா டெல்லியிலிருந்து இன்று காலை 10.50 மணிக்கு தனி விமானத்தில் புறப்படுகிறார். மதியம் 1.40 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வந்தடைவார்.

விமான நிலையில் அமித்ஷாவுக்கு தமிழக பாஜக நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளிக்கவுள்ளார்கள். விமான நிலையத்தில் அவருக்கு மேளதாளத்துடன் பூரண கும்ப மரியாதை அளிக்கப்படவுள்ளது.

அங்கிருந்து காரில் லீலா பேலஸ் ஓட்டலுக்கு செல்கிறார். 14 இடங்களில் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கிராமிய கலைகளான கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தாரை தப்பட்டை, செண்டை மேளம், சிலம்பம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

நாடு முழுவதும் தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் அமித்ஷா வரவேற்பு நிகழ்ச்சிக்கு பாஜக நிர்வாகிகள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால் தமிழக அரசோ எந்த அனுமதியையும் நேற்று வரை தரவில்லை.

ஓட்டலில் ஓய்வு எடுக்கும் அமித்ஷா, அங்கிருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு கலைவாணர் அரங்கித்திற்கு வருகிறார். அங்கு திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய்கண்டிகையில் ரூ 380 கோடியில் புதிய நீர்த்தேக்க திட்டத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கும் விழாவும், ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணி உள்பட பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெறுகிறது.

இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை வகிக்கிறார். துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் சிறப்புரை ஆற்றுகிறார். விழா முடிந்ததும் லீலா பேலஸ் ஓட்டலில் தங்கும் அமித்ஷா நாளை காலை 10.15 மணிக்கு மீண்டும் டெல்லி செல்கிறார்.

அமித்ஷாவுக்கு சென்னையில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கலைவாணர் அரங்கம், லீலா பேலஸ் ஆகியவை சிஆர்பிஎஃப் படையின் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன.

– பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/union-home-minister-amitshah-to-arrive-chennai-403684.html