இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருக்கலாம்.. சென்னை மின்சார ரயில் குளறுபடி அறிவிப்பு! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் நாளை முதல் மின்சார ரயிலில் பெண்கள் பயணிக்கலாம் என்று அறிவித்ததை நினைத்து மகிழ்ச்சி அடைந்த பெண்கள், பீக்அவர்ஷில் அனுமதி இல்லை என்று ரயில்வே அறிவித்துள்ளதால் வேதனை அடைந்துள்ளனர்.

சென்னையில் மெட்ரோ ரயிலை இயக்க நடவடிக்கை எடுத்த அரசுகள், சாமானியர்கள் அதிகம் பயணம் செய்யும் மின்சார ரயிலை ஏனோ கண்டுகொள்ளவில்லை.

மின்சார ரயிலில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் கொரோனா எளிதில் பரவும் என்ற அச்சம் காரணமாக இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை.

பேருந்துகள், சிறப்பு ரயில்கள், விமானங்கள், மெட்ரோ ரயில்கள் என அனைத்துமே ஓடத்தொடங்கிவிட்ட போதிலும், மின்சார ரயில்கள் மட்டும் சாமானியர்களுக்காக இன்னமும் ஓடவில்லை. இப்போதை நிலையில் அரசு பணிகளில் ஈடுபடுவோர் மட்டும் பணியிக்க சென்னையில் மின்சா ரயில்கள் இயக்கப்படுகிறது. எப்போது எல்லோரும் பயணிக்கும் வகையில் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

244 மின்சார ரயில்கள்

இந்நிலையில் தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் அத்தியாவசிய பணியாளர்களுக்காக தெற்கு ரயில்வே தினசரி 244 சென்னை புறநகர் சிறப்பு மின்சார ரயில்களை இயக்கப்படுகிறது. இது கொரோனா காலத்திற்கு முன் இயக்கப்பட்ட ரயில்களில் ஏறக்குறைய 40% இயக்கப்படுகிறது.

ரயில்வே அனுமதி

தற்போது 23ம் தேதி முதல் அத்தியாவசிய பணிகள் பட்டியலின்கீழ் வராத பெண் பயணிகளை சாதாரண நேரங்களில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரையிலும் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாள்முழுவதும் பயணிக்க ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது

பீக் அவர்ஸ் நேரங்கள்

சாதாரண நேரங்கள் என்பது காலை 7 வரையிலும், காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும், மாலை 7.30 மணிக்கு பிற்பாடு உள்ள நேரங்கள் என வரையரை செய்துள்ளது இந்த குறிப்பிட்டுள்ள நேரங்களில் மட்டும் மாதாந்திர பயணச்சீட்டு அல்லது சாதாரண பயணச்சீட்டு மூலம் பெண் பயணிகள் சிறப்பு ரயிலில் பயணிக்கலாம்.

7 முதல் 10 அனுமதி இல்லை

அத்தியாவசிய பணியாளர் பட்டியலின் கீழ் வராத பெண் பயணிகள் நெரிசல் மிகுந்த நேரங்களில் அதாவது காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும் மற்றும் மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும், திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை பயணிக்க அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் கோரிக்கை

தெற்கு ரயில்வேயின் இந்த அறிவிப்பை நினைத்து சந்தோஷப்படுவதா அல்லது முக்கியமாக வேலைக்கு செல்லும் நேரத்தில் போக அனுமதி இல்லை என்பதை நினைத்துவருத்தப்படுதவதா என பெண்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தெற்கு ரயில்வேயின் இந்த அறிவிப்பு பருத்தி மூட்டை குடோன்லேயே இருக்கலாம் என்பது போன்ற அறிவிப்பாக உள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்தனர். அனைத்து நேரங்களிலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் முதியவர்களை மட்டுமாவது மின்சார ரயில்களில் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

– பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/women-s-happy-to-announce-that-women-can-travel-on-the-electric-train-in-chennai-from-tomorrow-403758.html