நிவர்.. 117 கி.மீ வேகத்தில் தீவிர புயலாக கரையை கடக்க வாய்ப்பு.. சென்னையில் மிக கன மழை பெய்யும் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: நிவர் புயல் காரணமாக, சென்னை நகரில் மிக கன மழை பெய்யும் என்று அரசு மற்றும் தனியார் வானிலை மையங்களின் கணிப்புகள் உறுதியாகச் சொல்கின்றன.

இந்த நிலையில்தான், தலைமைச் செயலாளர் தலைமையில் இன்று புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள, காற்றழுத்த தாழ்வு மண்டலம், (நிவர் என்ற பெயரில்) புயலாக மாற உள்ளது. இது தீவிர புயலாக கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தீவிர புயல் என்பதால், சுமார் 89 கி.மீ முதல் 117 கி.மீ வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளதாம்.

imageதமிழகத்தை தாக்கும் நிவர் புயல்.. இன்றிலிருந்து 3 நாட்கள்.. எந்தெந்த நாளில் எங்கெங்கு மழை பெய்யும்?

சென்னைக்கு அருகே

உருவாக உள்ள நிவர் புயல் தற்போது, சென்னையில் இருந்து 630 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது 25ம் தேதி காரைக்கால் மற்றும் மகாபல்லிபுரம் இடையே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நாளை முதல், டெல்டா மாவட்டங்கள் உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் படிப்படியாக மழை அதிகரிக்க உள்ளது. 25 மற்றும் 26ம் பகுதிகளில் சென்னையில் உச்சகட்ட மழை இருக்கும்.

சென்னையில் கன மழை

தற்போதைய நிலவரப்படி, புயல் கரையைக் கடக்கும் நாளில், சென்னையில், அதிகபட்சமாக 10 செ.மீ வரை மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமையான இன்று வானம் மேக மூட்டத்துடன் இருக்கும். லேசான சாரல் மழை பெய்யக் கூடும். செவ்வாய்க்கிழமை, புயல் கரையை நெருங்கும் என்பதால், சென்னையில் நல்ல மழை பெய்யத் தொடங்கும்.

புயலின் வேகம்

சென்னை மட்டுமல்லாது, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி ஆகிய பகுதிகளிலும் புதன்கிழமை கன மழை பெய்யும். வங்கக் கடலில் 18 கி.மீ வேகத்தில் வட மேற்காக நகர்ந்து வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை மண்டல மைய துணை இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் கூறுகையில், செவ்வாய்க்கிழமை முதல் சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் நல்ல மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளார்.

நிவர் பெயர் சூட்டியது ஈரான்

நிவர் புயலுக்கு இந்த பெயரை சூட்டியது ஈரான் ஆகும். முதலில் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மையம் புயலாக மாறும் என கணிக்கப்பட்ட நிலையில், பிறகு அது 12 மணி நேரமாக குறைக்கப்பட்டது. அந்த அளவுக்கு தீவிர புயலாக மாறுகிறது நிவர் என்கிறார்கள் தனியார் வானிலை ஆய்வு மையத்தினர்.

சென்னை மழை அளவு

அக்டோபர் 1 முதல் சென்னையில் 477.4 மி.மீ மழை பெய்துள்ளது. இந்த காலகட்டத்தில் 539 மி.மீ மழை பெய்திருக்க வேண்டும். எனவே இது 11 சதவீத பற்றாக்குறையாகும். நிவர் புயல் காலகட்டத்தில், மழைப் பொழிவு அதிகரித்து, சென்னையின் தண்ணீர் பற்றாக்குறை சரியாகும் என்று எதிர்பார்க்கிறார்கள், தனியார் வானிலை ஆய்வாளர்கள்.

– பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/cyclone-nivar-will-give-heavy-rain-for-chennai-403838.html