ஒர்க் புரம் ஹோம்.. சென்னை சாப்ட்வேர் இன்ஜினியர் தற்கொலை.. பகீர் காரணம்! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை ஆதம்பாக்கத்தில் வீட்டில் இருந்து வேலை பார்த்து வந்த சாப்ட்வேர் இன்ஜினியர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் நியூகாலனி 8வது தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் சாய்அரவிந்த்(23). இவர் தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக வேலை பார்த்து வந்தார்.

தற்போது வீட்டில் இருந்த படியே வேலை செய்து வந்தார். கடந்த சில தினங்களாக மன அழுத்தமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை வீட்டிற்கு அவரது தாய் வந்தபோது சாய் அரவிந்த் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வழியிலேயே பலி

பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் உயிருக்கு ஆபத்தாக இருப்பதால் மேல் சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சாய் அரவிந்த் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மன அழுத்தம்

இது பற்றி தகவல் அறிந்ததும் ஆதம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலன் மற்றும் போலீசார் விசாரித்தனர். அப்போது சாய் அரவிந்த் பெற்றோர் தந்த புகாரில் கடந்த சில நாட்களாக பணி பளு காரணமாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அதன் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என தெரிவித்தனர். இது தொடர்பாக ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கந்துவட்டி காரணமா?

மேலும் சாய் அரவிந்த் ‘ஆன்-லைன்’ செயலி முலம் கந்து வட்டியில் பணத்தை கடனாக பெற்றதாகவும் உரிய காலத்தில் பணத்தை தராவிட்டால் அநாகரீகமான முறையில் பேசியதுடன், மோசடிக்காரர் என படத்துடன் வந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

போலீஸ் விசாரணை

ஆனால் இது பற்றி சாய் அரவிந்த் பெற்றோரிடம் கேட்டபோது அதுபற்றி எதுவும் தெரியாது. மன அழுத்தத்தால் தான் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்து உள்ளனர். மனஅழுத்தம் காரணமா அல்லது ஆன்லைன் செயலில் கடன் வாங்கியது காரணமா என்பது போலீஸ் விசாரணைக்கு பின்னரே தெரியவரும்.

– பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/software-engineer-commits-suicide-while-working-from-home-in-adambakkam-chennai-403996.html