‘வர்தா’ அனுபவத்துடன் ‘நிவர்’ புயலை எதிர்கொள்ள தயாராகும் சென்னை – Indian Express Tamil

சென்னைச் செய்திகள்

2016ம் ஆண்டு வர்தா புயல் பாதிப்பு அனுபவத்தில் இருந்து கற்ற பாடங்களுடன் நாளை கரையைக் கடக்க உள்ள ‘நிவர்’ சென்னை முழு வேகத்தில் தயாராகி வருகிறது.

தமிழகம் கடந்த 5 ஆண்டுகளில் தமிழகம் 2 புயல் பாதிப்புகளை சந்தித்துள்ளது. இப்போது, 3வதாக நிவர் புயலை எதிர்கொள்கிறது. 2016, டிசம்பரில் வங்கக் கடலில் உருவான வர்தா புயல் சென்னைக்கு அருகே கரையைக் கடந்தபோது பெரிய அளவில் சென்னையில் பாதிப்பை ஏற்படுத்தியது. சென்னையில் ஏராளமான மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு, மின்சாரம் துண்டிப்பு, தண்ணீர் தேங்கியது உள்ளிட்ட பல பிரச்னைகளை சென்னை மக்கள் சந்தித்தனர்.

அதே போல 2018, நவம்பரில் வங்கக் கடலில் உருவான கஜா புயல் வேதாரண்யம் பகுதியில் கரையைக் கடந்தபோது, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. தென்னை, வாழை மற்றும் பயிர்கள் சேதமடைந்தது. 12 பேர் உயிரிழந்தனர்.

வர்தா, கஜா புயல்களால் ஏற்பட்ட சேதங்கள் தமிழக மக்களின் நினைவில் இருந்து இன்னும் நீங்காத நிலையில், ‘நிவர்’ புயல் தாக்க வருகிறது.

தென் மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள நிவர் புயல் நாளை (நவம்பர் 25) மாலை மாமல்லபுரம் – காரைக்கால் இடையே தீவிர புயலாக கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால், காரைக்கால், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 110 முதல் 120 கி.மீ வேகம் வரை புயல் காற்று வீசக்கும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், வர்தா புயல் பாதிப்பில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களுடன் சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்கள் நிவர் புயலை எதிர்க்கொள்ள அரசுத் துறைகள் தயார் நிலையில் உள்ளது. புதன்கிழமை மாலை நிவர் புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 100 கி.மீ முதல் 110 கி.மீ வேகம் வரை காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

2016ம் ஆண்டு போல இல்லாமல், இந்த முறை, அரசுத் துறைகள் வர்தா புயல் பாதிப்பில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் 2018ம் ஆண்டில் டெல்டா மாவட்டங்களை தாக்கிய ‘கஜா’ புயல் பாதிப்பில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களில் இருந்து அரசு துறைகள் நிவர் புயலை எதிர்க்கொள்ள சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை (டி.என்.டி.ஆர்.எஃப்) மாநிலத்தில் காவல்துறையினருக்கும் வீட்டுக் காவல்படையினருக்கும் மீட்புப் பணி பயிற்சி அளித்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மீட்பு பணி உபகரணங்களைப் யாண்படுத்துவது மற்றும் மீட்பு பணி நடவடிக்கைகளை கையாள 60 ஆயுத ரிசர்வ் போலீஸ் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சி பெற்ற மீட்பு படையினர் மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் மீட்பு நடவடிக்கைகாக நிறுத்தப்படுவார்கள் என்று டி.என்.டி.ஆர்.எஃப் தலைவர் ஏ.டி.ஜி.பி ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். தீயணைப்பு மற்றும் மீட்பு பணியாளர்கள் அவர்கள் தேசிய பேரிடம் மீட்பு படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினருக்கு உதவியாக பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் இருக்கிறார்கள்.

சென்னை பெருநகர மாநகராட்சி நிர்வாகம் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில், ஒவ்வொரு மண்டலத்திலும் திங்கள்கிழமை இரவுக்குள் குறைந்தது 5 நிவாரண மையங்களை தயார் நிலையில் வைக்க மண்டல அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அதே நேர்த்தில், நிவர் புயலை எதிர்கொள்ள கடலோர காவல்படை தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2 ஹெலிகாப்டர்கள், 4 கப்பல்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 15 பேரிடர் மேலாண்மை குழுக்களும் தயார் நிலையில் இருப்பதாக கடலோர காவல்படை தகவல் தெரிவித்துள்ளது.

முதல்வர் பழனிசாமி நிவர் புயல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். நிவர் புயலை எதிர்கொள்ள தமிழக அரசு பல்வேறு துறைகளை முடுக்கிவிட்டுள்ளது. முதல்வர் பழனிசாமி, துறை சார்ந்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Source: https://tamil.indianexpress.com/tamilnadu/nivar-cyclone-chennai-ready-to-face-nivar-cyclone-233695/