நிவர் புயல் காரணமாக, சென்னையில் முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளது, மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என சென்னை பெருநகர காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
நிவர் புயல் இன்று நள்ளிரவு புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நிவர் புயல் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 100 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று (நவம்பர் 24) முதலே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சென்னையில் தாழ்வான பல்வேறு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் மொத்தம் 77 நிவாரண முகாம்களை அமைத்து பாதிக்கப்பட்ட மக்கள் வந்து பாதுகாப்பாக தங்கிக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளது.
தேசிய பேரிடர் மீடுக் குழுவினர், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறையினர் என பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பேருந்து போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை அருகே உள்ள செம்பம்பாக்கம் ஏரி 22 அடி கொள்ளளவு நிரம்பியதால் ஏரியில் இருந்து 5,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், அடையாறு கரையோரப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை பெருநகர காவல்துறை நிவர் புயல் காரணமாக, சென்னை மாநகரின் முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன. சென்னையில் மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், மறுஅறிவிப்பு வரும் வரை சென்னையின் பிரதான சாலைகள் மூடப்பட்டிருக்கும். அத்தியாவசிய பணிகளை மேற்கொள்பவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Source: https://tamil.indianexpress.com/tamilnadu/greater-chennai-police-announced-important-chennai-roads-closed-people-do-not-come-out-233990/