முதியவர்களை சுமந்து மீட்கும் சென்னை காவலர்கள்.. காவல் துறை ஆணையர் பாராட்டு – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: நிவர் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் சிக்கிய முதியவரை போலீஸார் தோளில் சுமந்து மீட்பதை சென்னை மாநகர் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் பாராட்டியுள்ளார்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் இன்று இரவு காரைக்கால்- மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலால் நேற்று முதல் சென்னையில் கனமழை பெய்துவருகிறது.

அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில் புறநகர் பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. முட்டி அளவுக்கு தண்ணீரால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. குடிதண்ணீர் எது சாக்கடை தண்ணீர் எது என தெரியாத அளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளது.

இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். வெள்ள நீர் அதிகமாக அதிகமாக மக்கள் அப்பகுதியை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் வயதானவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களால் அவ்வாறு வெளியேற முடியவில்லை.

இதனால் போலீஸார் அவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு முதியவரை போலீஸார் தோளில் சுமந்து மீட்கும் புகைப்படங்கள் வெளியாகின.

இதை தனது ட்விட்டர் பக்கத்தில் சென்னை கமிஷனர் மகேஷ் அகர்வால் கூறுகையில் அவசரக் காலக் கட்டங்களில் களத்தில் நின்று பணிபுரிபவர்களின் கடமைக்கு ஒரு சல்யூட் செலுத்துங்கள். அணியை நினைத்து பெருமை கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

– பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-commissioner-praises-policemen-who-resuces-people-from-flood-404152.html