அப்படியே ஷட்-டவுன் செய்துவிட்டது.. மறுஅறிவிப்பு வரும் வரை.. முதல்வர் போட்ட உத்தரவு.. அதிரும் சென்னை! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: நிவர் புயல் காரணமாக சென்னையின் இயல்பு வாழ்க்கை மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளது. யாரும் வெளியே செல்ல கூடாது என்றும் தமிழக அரசு மூலம் சென்னை பகுதி மக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நிவர் புயலின் தாக்கம் சென்னையில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சென்னையில் இருக்கும் பல்வேறு பகுதிகளில் தற்போது விடாமல் மழை பெய்து வருகிறது.

நேற்று அதிகாலை தொடங்கி மழை, தற்போது வரை விடாமல் தீவிரமாக பெய்து வருகிறது. நிவர் புயல் காரணமாக சென்னையின் சாலைகள் வெள்ளம் போல காணப்படுகிறது.

காற்று அதிகம்

சென்னையில் சில பகுதிகளில் மழையை விட காற்றுதான் அதிகம் வீசுகிறது. இப்போதே சென்னையில் பல்வேறு பகுதிகளில் காற்றின் வேகம் 70 கிமீக்கும் அதிகமாக இருக்கிறது. இதுவரை சென்னையில் 30க்கும் அதிகமான மரங்கள் விழுந்துள்ளது. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

பேருந்து நிறுத்தம்

இந்த நிலையில் நிவர் புயல் காரணமாக மறு அறிவிப்பு வரும்வரை சென்னையின் பல்வேறு பகுதிகளில் மாநகர பேருந்து நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் மாநகர பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது. சாலைகள் எல்லாம் முடங்கி உள்ளதால் பேருந்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

7 மணிக்கு

சென்னையின் நிலவரத்தை பார்த்து பேருந்துகளை நிறுத்தும் உத்தரவை முதல்வர் வெளியிட்டு உள்ளார். நிவர் புயல் காரணமாக சென்னையில் முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளது. மறுஅறிவிப்பு வரும்வரை பிரதான சாலைகள் மூடப்படுகிறது. அதேபோல் சென்னையில் மெட்ரோ சேவையும் 7 மணியோடு நிறுத்தப்படுகிறது.

நாளை எப்படி

நாளை மெட்ரோ இயங்குமா என்பது இப்போது தெரிவிக்க முடியாது. நாளை வானிலையை பொறுத்து இது குறித்து முடிவு எடுக்கப்படும். நிவர் புயலால் மொத்தமாக சென்னையில் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. சார்ஜ் இல்லாத லேப்டாப் ஷாட் டவுன் ஆவது போல கொரோனா லாக்டவுன் பின் மீண்டும் எழ தொடங்கி சென்னை.. அப்படியே முடங்கி உள்ளது.

மின்சாரம்

சென்னையில் இப்போது பெரும்பாலான இடங்களில் மின்சாரம் இருக்கிறது. ஆனால் இன்னும் சில மணி நேரங்களில் புயல் கரையை கடக்கும் என்பதால் பாதுகாப்பு கருதி மின்சாரம் மொத்தமாக துண்டிக்கப்பட வாய்ப்புள்ளது. சென்னையில் இயல்பு வாழ்க்கை அப்படியே காலியாகிவிட்டது.

இன்று இரவுதான் உண்மையான மழையே இருக்கிறது. அதனால் அதற்குபின்தான் உண்மையான சேதம் தெரிய வரும். நாளை காலையும் சென்னையில் அதி தீவிர மழை பெய்யும். இதனால் நாளையும் சென்னையில் இயல்பு வாழ்க்கை திரும்புவது கஷ்டம் என்று கூறுகிறார்கள்.

நீக்கம்

சென்னையில் இருக்கும் ஆபத்தான பேனர்களை அகற்ற வேண்டும் என்றும் கூட கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மக்கள் யாரும் வெளியே வர கூடாது. தேவையில்லாதபொருட்கள் மொட்டை மாடியில் இருந்தால் நீக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.. இதனால் நாளை மதியம் வரை சென்னை முடக்கத்தில் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

– பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-got-almost-shutdown-due-to-nivar-storm-404144.html