சென்னையில் விடிய விடிய வெளுத்தெடுத்த பெருமழை- புரசைவாக்கத்தில் 15 செ.மீ. மழை – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் நேற்று காலை 8.30 மணி முதல் இன்று அதிகாலை 5.30 மணிவரை அதிகபட்சமாக புரசைவாக்கத்தில் 15 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

வங்க கடலில் உருவாகி உள்ள நிவர் புயல் இன்று இரவு புதுவை அருகே கரையை கடக்க உள்ளது. நிவர் புயல் உருவானதில் இருந்து தமிழக கடலோர மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது.

குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று முதல் விடிய விடிய கனமழை கொட்டியது. சென்னையில் நேற்று காலை 8.30 மணிவரை 7 செ.மீ. மழை பதிவாகி இருந்தது.

பின்னர் பகல் முழுவதும் கனமழை பெய்தது. நேற்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி நிலவரப்படி சென்னை நுங்கம்பாக்கத்தில் 9.7 செ.மீ. மழை பதிவானது. சென்னை மீனம்பாக்கத்தில் 8.6 செ.மீ. மழை பதிவாகி இருந்தது.

இதனையடுத்து இன்று காலை 8.30 மணிக்குள் சென்னையின் மழை அளவு 20 செ.மீ ஆக உயரக் கூடும் என்று வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருந்தார். இந்த நிலையில் நேற்று காலை 8.30 மணி முதல் இன்று அதிகாலை வரை சென்னை மீனம்பாக்கத்தில் மொத்தம் 12 செ.மீ. மழை பதிவாகி இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் புரசைவாக்கத்தில் அதிகபட்சமாக 15 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

– பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/cyclone-nivar-120-mm-rain-recorded-in-chennai-meenabakkam-404065.html