நிவர் புயலைத் தாங்குமா கல்பாக்கம் அணுமின் நிலையம்?! – பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம் – Vikatan

சென்னைச் செய்திகள்

அணுமின் நிலையத்தைச் சேர்ந்த ஊழியர்களிடம் நாம் பேசியபோது, “நிவர் புயலால் இங்கு பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை. தேவையான பணியாளர்கள் மற்றும் பொறியாளர்கள் மட்டுமே தற்போது பணியில் இருக்கிறார்கள். மற்ற அனைவரும் வீட்டுக்கு அனுப்பப்பட்டுவிட்டனர்” என்றனர்.

கல்பாக்கம் அணுமின் நிலையம்

அணுமின் நிலையத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகளிடம் நாம் பேசியபோது, “தற்போது அணுமின் நிலையப் பகுதியில் தேசியப் பேரிடர் மீட்புப்படையினர் தயார் நிலையில் இருக்கிறார்கள். உயர் அதிகாரிகள் அனைவரும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறோம். சுனாமி வந்தபோது அணுமின் நிலைய வளாகத்துக்குள் சில இடங்களில் கடல்நீர் புகுந்தது. எனவே, அப்போதே சுற்றுச்சுவர் உள்ளிட்ட பாதுகாப்புகளை வலுப்படுத்திவிட்டோம். எனவே, இப்போது அதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாது. நிவர் புயலால் எந்தவித பாதிப்பும் அணுமின் நிலையத்துக்கு ஏற்படாத வகையில் அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கிறோம். தற்போது அணுமின் நிலையம் வழக்கம் போல செயல்பட்டுவருகிறது.

இங்கு கட்டடங்கள் எல்லாம் வலுவாக உள்ளன. எனவே, எந்தப் பிரச்னையும் இல்லை. வேண்டுமானால், இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை எடுத்துச்செல்லும் மின் கம்பிகள் புயலால் சேதமடையலாம். கடல் சீற்றம் அதிகம் இருந்தால், அதிலிருந்து தற்காத்துக்கொள்வதற்கும் சில ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். 130 கி.மீ வேகத்துக்கு காற்று வீசும் என்று சொல்லப்பட்டாலும், அதையெல்லாம் தாங்கும் அளவுக்கு அணுமின் நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, பாதிப்புகள் எதுவும் இருக்காது” என்றனர்.

Source: https://www.vikatan.com/news/tamilnadu/niver-cyclone-and-safety-of-kalpakkam-atomic-power-plant