கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தை கோவில் நிலத்தில் கட்டக்கூடாது- ஐகோர்ட்டு உத்தரவு – மாலை மலர்

சென்னைச் செய்திகள்

கோவில் நிலத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கான கட்டுமான பணிகளை டிசம்பர் 9-ந் தேதி வரை மேற்கொள்ளக்கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை:

சென்னை ஐகோர்ட்டில், திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், “புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு, கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கு வீரசோழபுரம் எனும் இடத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 35 ஏக்கர் நிலத்தை அரசுக்கு ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலத்தை அரசுக்கு வழங்குவது தொடர்பாக மக்களின் கருத்து கேட்புக்கூட்டத்தை கடந்த அக்டோபர் 29-ந் தேதி இந்து சமய அறநிலையத்துறை நடத்தியது.

அதற்கு முன்பாகவே, இந்த நிலத்தில் கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டு விழாவை நடத்தி முடித்துவிட்டார். ரூ.100 கோடி மதிப்புள்ள இந்த கோவில் நிலத்தை வெறும் ரூ.1 கோடியே 98 லட்சத்துக்கு அரசுக்கு வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே, கலெக்டர் அலுவலகம் கட்டும் பணிக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “கோவில் நிலத்துக்கு சரியான விலையை அரசு கொடுத்து வாங்கி, அந்த தொகையை வங்கியில் டெபாசிட் செய்தால், அந்த தொகை மூலம் கோவிலுக்கு வருமானம் வருமே?” என்று கேள்வி எழுப்பினர்.

அப்போது, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளடர் கார்த்திகேயன், “கோவில் நிலத்தை அரசுக்கு குத்தகைக்கு விட ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்களின் கருத்தும் கேட்கப்பட்டுள்ளது.

குத்தகைக்கு விடும்பட்சத்தில் நிலம் கோவில் பெயரில் தான் இருக்கும். குத்தகை தொகையை ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் உயர்த்தப்படும்” என்றார்.

அப்போது, அந்த நிலத்தில் கட்டுமான பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படுகிறதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு பிளடர் ஜெயபிரகாஷ் நாராயணன், “நிலத்துக்குள் செல்ல தற்காலிக சாலை அமைக்கும் பணி நடக்கிறது. அங்கு தொழிலாளர்கள் தங்குவதற்கு குடிசைகள் அமைக்கப்பட்டுள்ளன” என்றார்.

இதையடுத்து இந்த வழக்கிற்கு தமிழக அரசு, இந்து சமய அறநிலையத்துறை பதில் மனுவை டிசம்பர் 9-ந் தேதிக் குள் தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை, கலெக்டர் அலுவலகம் அமைக்கும் பணிகளை மேற்கொள்ளக்கூடாது. பணிகளை தள்ளிவைக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Tags :

[embedded content]

Source: https://www.maalaimalar.com/news/district/2020/11/28070406/2114642/Tamil-News-Madras-High-Court-order-Kallakurichi-Collector.vpf