சென்னை: 830 மில்லியன் லிட்டராக அதிகரிப்பு.. ஏன்? – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
செம்பரம்பாக்கம் ஏரி

  • Share this:
சென்னை மாநகருக்கு குடிநீர் விநியோகம் செய்யும் ஏரிகளில் கூடுதலாக நீர் இருப்பு இருப்பதால் குடிநீர் விநியோகம் 830 மில்லியன் லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகரின் குடிநீர் தேவையை பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் இருந்து பெறப்படும் தண்ணீர் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. இந்த ஏரிகளுக்கான நீர் வரத்து கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மற்றும் மழை நீர் ஆகியவைதான் சென்னை நீர் வரத்துக்கான மூலம்.
தற்போதைய சூழ்நிலையில் கண்டலேறு அணையிலும் போதிய அளவு நீர் இருப்பதால், கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான முதல் தவணை தண்ணீர் பூண்டி ஏரிக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சபரிமலையில் ஐயப்பன் கோவிலில் இன்று முதல் நாளொன்றுக்கு 2000 பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி: தேவசம் போர்டு அறிவிப்பு..

இந்த நிலையில் வடகிழக்கு பருவ மழை மற்றும் நிவர் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக மழை அதிகமாக இருந்தது. குறிப்பாக ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் மற்றும் புதிதாக திறக்கப்பட்ட தேர்வாய்கண்டிகை மற்றும் வீராணம் ஆகிய 6 ஏரிகளிலும் சேர்த்து தற்போது 10 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது.

ஏரிகளில் போதுமான அளவு நீர் இருப்பு இருப்பதால் சென்னை பெருநகருக்கு வழங்கப்படும் குடிநீர் 750 மில்லியன் லிட்டரில் இருந்து 830 மில்லியன் லிட்டராக உயர்த்தி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தொடரும் நாட்களிலும் போதுமான மழை இருந்தால் இதே அளவு அடுத்த ஆண்டும் விநியோகம் செய்ய முடியும். தற்போது இருக்கும் தண்ணீர் மூலம் அடுத்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை வரை தாக்குப்பிடிக்க முடியும் என்ற நிலை உருவாகி உள்ளதாக பொதுப்பணித்துறை மற்றும் குடிநீர் வாரிய அதிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்


First published: November 30, 2020

Source: https://tamil.news18.com/news/tamil-nadu/chennai-water-income-raised-to-830-litres-main-reservoirs-chembarambakkam-poondi-puzhal-cholavaram-mg-375497.html