சென்னை டிராஃபிக்கை குறைக்க விரைவில் பயன்பாட்டுக்கு வரும் இன்னொரு சாலை! – Samayam Tamil

சென்னைச் செய்திகள்
சென்னை மாநகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், மாநகரின் வழியாக அண்டை மாநிலங்களுக்கு செல்லும் சரக்கு வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் உள்ளிட்டவை சிட்டிக்குள் வந்து சுற்றி செல்லாமல் எளிதாக பயணிக்க, நகர எல்லைகளில் ஆங்காங்கே வெளிவட்ட சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் முக்கியமானது சென்னை -பெங்களூரு, சென்னை -கோல்கட்டா நெடுஞ்சாலைகளை இணைக்கும் வண்டலூர் -மீஞ்சூர் வெளிவட்ட சாலை. இதன் இரண்டாம் கட்ட பணிகள் நிறைவடைந்து சாலை விரைவில் திறக்கப்படவுள்ளது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த புகைப்பட கட்டுரை.

64 கி.மீ. நீண்ட சாலைசென்னை மாநகர எல்லைக்குள் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில், வண்டலூர் -மீஞ்சூர் இடையே 64 கிலோமீட்டர் நீளத்துக்கு வெளிவட்ட சாலை அமைக்க திட்டமிடப்பட்டு, 2011 இல் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வண்டலூரில் தொடங்கும் இந்த சாலை, சென்னை -திருப்பதி, சென்னை- பெங்களூரு, சென்னை -கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலைகளை இணைத்து, திருவொற்றியூர்- பொன்னேரி சாலையில் மீஞ்ஞரில் முடியும்படி, மொத்தம் 2,160 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவால் திறக்கப்பட்டதுவண்டலூர் முதல் மீஞ்சூர் வரையிலான 64 கிலோமீட்டர் நீள சாலை அமைக்கும் பணிகள் 2011 இல் தொடங்கியது. இதில், வண்டலூர் -நெமிலிச்சேரி வரையிலான பணிகள் 2103 ஏப்ரலில் நிறைவடைந்து, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. அதாவது முதல்கட்ட பணிகள் இரண்டே வருடங்களில் முடிக்கப்பட்டது.

பிரதமர் மோடி திறக்கிறார்?வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையின் முதல் கட்ட பணிகள் நிறைவடைந்து, ஏழாண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் நெமிலிச்சேரி -மீஞ்சூர் வரையிலான இரண்டாம் கட்ட சாலை பணிகளை விரைந்து முடிக்கக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, இந்த வெளிவட்ட சாலையை முழுமையாக நிறைவேற்றும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு, தற்போது இப்பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் விரைவில் நடைபெறும் விழாவில் சாலையை போக்குவரத்து பயன்பாட்டுக்கு திறந்த திட்டமிடப்பட்டுள்ளது.

தாமதம் ஏன்?வண்டலூர் -மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், நெமிலிச்சேரி வரையிலான முதல்கட்ட பணிகள், இரண்டு ஆண்டுகளிலேயே நிறைவடைந்து 2103 இல் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால், நெமிலிச்சேரி முதல் மீஞ்சூர் வரையிலான இரண்டாம் கட்ட பணிகள், ஏழாண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சாலை அமைக்கும் பணிக்கு நிலத்தை கையகப்படுத்துதலில் ஏற்பட்ட சிக்கல்கள், அவை தொடர்பான வழக்குகளின் காரணமாக, இரண்டாம் கட்ட பணிகள் தாமதமடைந்து, தற்போது விரைவில் திறக்கப்படவுள்ளது.

Source: https://tamil.samayam.com/latest-news/chennai-news/one-more-outer-ring-road-will-come-to-use-soon-to-reduce-chennai-city-traffic/articleshow/79522338.cms