வன்னியருக்கு 20% இடஒதுக்கீடு போராட்டம்-பாமகவினர் நூற்றுக்கணக்கானோர் கைது- கல்வீச்சால் ரயில்கள் ரத்து – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு கோரி நடைபெற உள்ள போராட்டத்துக்கு வந்த பிற மாவட்ட பாமகவினர் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் பாமகவினர் சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

image

20% இடஒதுக்கீடு போராட்டம்- போலீஸ் தடுத்து நிறுத்தம்- சென்னை அருகே பாமகவினர் சாலை, ரயில் மறியல்! – வீடியோ

வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20% இடஒதுக்கீடு வழங்க கோரி சென்னையில் இன்று பாமகவினர் போராட்டம் நடத்துகின்றனர். சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை முற்றுகையிட்டு இந்த போராட்டம் நடைபெற உள்ளது.

imageவன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு கோரி இன்று முதல் போராட்டம்- சென்னையில் 100 பாமக நிர்வாகிகள் கைது

டிச. 4 வரை போராட்டம்

இன்று முதல் டிசம்பர் 4-ந் தேதி வரை இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்திருந்தார். மேலும் பிற மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் போராட்டத்தில் பங்கேற்கவும் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

முன்னெச்சரிக்கை கைது

இந்த நிலையில் சென்னையில் 100-க்கும் மேற்பட்ட பாமகவினர் இன்று காலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலும் சென்னைக்கு வந்த பிற மாவட்ட பாமகவினர் பெருங்களத்தூர் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

பாமகவினர் சாலை மறியல்

சுமார் 2 மணிநேரமாக தடுத்து நிறுத்தப்பட்ட பாமகவினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் குதித்தனர். இதனால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையான ஜிஎஸ்டியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சுமார் 2.கி.மீ தொலைவுக்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டன.

புறநகர் ரயில்கள் மறியல்

சாலை மறியலில் ஈடுபட்ட பாமகவினர் சிலர், புறநகர் மின்சார ரயில்களை மறித்து போராட்டம் நடத்தினர். இதனால் புறநகர் மின்சார ரயில் சேவையும் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. அப்போது சிலர் மின்சார ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் இன்று காலை சென்னை பெருங்களத்தூர் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

வாலஜா சுங்க சாவடியில் மறியல்

இதேபோல் ராணிப்பேட்டை, வாலாஜா, சோளிங்கர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 20% தனி இட ஒதுக்கீடு போராட்டத்தில் பங்கேற்க பல்வேறு கிராமங்களிலும் ஊர்களிலிருந்தும் வாகனங்களில் கொடிகளை கட்டி கொண்டு பாமகவினர் சென்றனர் அவர்களை காவல்துறையினர் வாலஜா சுங்கச்சாவடியில் தடுத்து நிறுத்தினர் இதனை கண்டித்தும் இட ஒதுக்கீடு போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக செல்ல அனுமதிக்க கோரி சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வாலாஜா சுங்கசாவடியில் பாமகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து திருமண மண்டபங்களில் சிறைவைத்தனர் அங்கேயும் பாமகவினர் தனி இட ஒதுக்கீடு கேட்டு வன்னியர் சங்க மாவட்டத்தலைவர் பழனி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புறநகர் ரயில்கள் ரத்து

சென்னையில் பாமகவினர் போராட்டம் தொடரும் நிலையில் புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை கடற்கரை- தாம்பரம் இடையேயான ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் சென்னையில் மறியலில் ஈடுபட்டு வரும் பாமகவினர் ஆங்காங்கே கைது செய்யப்பட்டும் வருகின்றனர்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் – பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/20-vanniyar-reservation-pmk-cadres-protest-in-chennai-404599.html