சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு அமெரிக்காவில் உள்ள உலக பாதுகாப்பு அமைப்பு விருது – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

அமெரிக்காவில் உள்ள உலக பாதுகாப்பு அமைப்பு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு சர்வதேச விருது வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

அமெரிக்காவில் உள்ள சர்வதேச தொழில்முறை பாதுகாப்பு சங்கமாக உலக பாதுகாப்பு அமைப்பு (டபிள்யுஎஸ்ஓ) செயல்பட்டு வருகிறது. பாதுகாப்பு தர நிலைகளை சிறப்பாக கடைபிடித்து பாதுகாப்பை உறுதி செய்யும் நிறுவனத்துக்கு இந்த அமைப்பு சார்பில் சர்வதேச விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

இதில், ஆண்டுதோறும் 6 நிறுவனங்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகின்றன. 2020-ம் ஆண்டுக்கான விருதை இந்தியாவில் இருந்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பெற்றுள்ளது. முன்மாதிரியான பாதுகாப்பு தரங்களை உறுதி செய்தல்,பாதுகாப்பு பதிவுகளை திறம்பட பராமரித்தல், மக்கள், உடைமை, வளங்கள், சுற்றுச்சூழல் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காக பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளின் பல்வேறு அம்சங்கள் குறித்து பொறியாளர்கள், ஊழியர்கள், பாதுகாப்பு, சுற்றுச்சூழல் சார்ந்த நிகழ்ச்சிகளை அவ்வப்போது நடத்துதல் உள்ளிட்டவை அடிப்படையில் இந்த விருது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/607658-chennai-metro.html