புரேவி சென்னையில் கனமழை… வெள்ளக்காடான சாலைகள் – தத்தளிக்கும் தலைநகரம் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: புரேவி புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நிலை கொண்டுள்ளதால் சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் கனமழை கொட்டித்தீர்க்கிறது. மாலை தொடங்கி அதிகாலை வரை விட்டு விட்டு பெய்த கனமழையால் சாலைகள் எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

வங்கக்கடலில் உருவான புரேவி புயல் இலங்கையில் கரையை கடந்து குமரிக்கடல் நோக்கி பயணித்தது. குமரிக்கும் பாம்பனுக்கும் இடையே புரேவி கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பாம்பனுக்கு அருகே நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்க்கிறது. எங்கும் வெள்ளக்காடாக மாறியுள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பல மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் நீடிப்பதால் மிக கனமழை தொடர வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டிணம் , கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் அடுத்த ஆறு மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மிக கன மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை முதல் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. சென்னையில் திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, தி நகர், கிண்டி, திருவான்மியூர், வண்ணாரப்பேட்டை, அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், கொளத்தூர், குரோம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

கே கே நகர், நுங்கம்பாக்கம் பகுதிகளில் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. சென்னை நகரின் பல சாலைகளில் தண்ணீர் குளம் போல தேங்கியுள்ளதால் வெள்ளக்காடாக மாறியுள்ளன. தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் அலுவலகம் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

சென்னையின் குடிநீர் ஆதாரமான புழல் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. மொத்த அடியான 21 அடியில் நீர்மட்டம் 19.2 அடியை எட்டியதால் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு 573 கன அடியில் இருந்து 2,000 கன அடியாக அதிகரித்துள்ளது. கனமழையால் ஏரிக்கு நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியாக அதிகரித்ததால் நீர் திறப்பும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக குன்றத்தூர், நத்தம், திருமுடிவாக்கம், திருநீர்மலை பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

– பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/burevi-cyclone-heavy-rain-in-chennai-flooded-roads-404925.html