முதன்முதலாக ஆன்லைன் பிஎஸ்சி படிப்பு: ஐஐடி சென்னையில் படிக்க 8,154 மாணவர்கள் தேர்வு – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

ஐஐடி சென்னையில் நிரலாக்க மற்றும் தரவு அறிவியல் பிரிவில் முதல் முறையாக ஆன்லைன் பிஎஸ்சி படிப்பில் சேர 8,154 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஐஐடியில் பட்டப்படிப்பு பயில ஜேஇஇ என்ற தேசிய அளவிலான நுழைவுத் தேர்வை மாணவர்கள் எழுத வேண்டும். ஆனால், தற்போதைய பிஎஸ்சி இணையவழிப் பட்டப்படிப்புக்கு ஜேஇஇ தேர்வு எழுத வேண்டியதில்லை.

இந்த இணையவழி பட்டப்படிப்பானது, அடிப்படைப் பட்டம், டிப்ளமோ பட்டம், இளநிலைப் பட்டப்படிப்பு என மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது. அதாவது, மூன்று நிலைகளில் எந்தக் கட்டத்திலும் மாணவர்கள் வெளியேறி, அதற்கான சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்நிலையில் இந்தியா முழுவதும் பல்வேறு படிப்புகளை முடித்த 8,154 மாணவர்கள் ஆன்லைன் பிஎஸ்சி படிப்பில் சேரத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் கலை, அறிவியல், பொறியியல் மற்றும் வணிகவியல் பயின்ற 1,593 மாணவர்களும் அடங்குவர். இந்த மாணவர்கள் ஜனவரி 2021 முதல் வழங்கப்பட இருக்கும் அடிப்படைப் பட்டப் படிப்பில் சேர்ந்து கொள்ளலாம்.

இதில் முதல்கட்டத் தேர்வு முறைக்கு மொத்தம் 30,276 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு 4 பாடங்களில் (கணிதம், ஆங்கிலம், புள்ளிவிவரம் மற்றும் கணக்கீட்டுச் சிந்தனை) 4 வாரப் பாடநெறி உள்ளடக்கம் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டன. இந்த மாணவர்கள் இணையத்தில் பாட விரிவுரைகளைக் கற்பதுடன், இணையத்தின் வாயிலாகவே தங்கள் கல்விப் பணிகளைச் சமர்ப்பித்தனர்.

4 வாரங்களின் முடிவில் தகுதித் தேர்வை எழுதினர். 50 சதவீதத் தேர்ச்சியுடன் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 20,396 மாணவர்கள் இரண்டாம் கட்டத் தேர்வை எழுதத் தகுதி பெற்றனர். கடந்த நவம்பர் 22-ம் தேதி தேர்வு நடைபெற்றது. இதிலிருந்து தற்போது 8,154 மாணவர்கள் பிஎஸ்சி அடிப்படைப் பட்டப் படிப்புக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஐஐடி சென்னை நடத்தும் ஆன்லைன் பிஎஸ்சி படிப்பை ஜனவரி மாதத்தில் படிக்கத் தொடங்குவர்.

Source: https://www.hindutamil.in/news/vetrikodi/news/609854-iit-madras-admits-the-first-batch-of-students-to-its-first-ever-online-bsc-degree.html