சென்னை ஐ.ஐ.டி.யில் மேலும் 79 பேருக்கு கொரோனோ தொற்று – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை ஐ.ஐ.டி.யில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 183 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு முதலில் அதிகரித்து வந்தது.  அதையடுத்து தமிழக அரசு, மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொண்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கையால் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பி வருகிறது.

இந்த நிலையில் சென்னை ஐ.ஐ.டி.யில் 66 மாணவர்கள், 5 ஊழியர்கள் என 71 பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சென்னை ஐ.ஐ.டி.யில் அனைத்து துறைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து விடுதிகளில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. 

இதைத்தொடர்ந்து மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து நேற்றுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 104 ஆக இருந்த நிலையில் இன்று மேலும், 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னை ஐஐடியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 183 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை ஐ.ஐ.டி.யில் தற்போது படித்துவரும் ஆராய்ச்சி மாணவர்கள் ஆன்-லைன் வழியில் படிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை அனைத்து துறைகளும் செயல்பட கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Source: https://www.dailythanthi.com/News/State/2020/12/15113533/79-more-infected-with-coronary-at-IIT-Chennai.vpf