சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் (கோப்புப்படம்)
சென்னை: சென்னையில் உள்ள அனைத்து கல்லூரி விடுதிகளிலும் 15 நாள்களுக்கு ஒரு முறை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்தார்.
சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் கரோனா நோய் பரவல் அதிகரித்தது மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நோய் பாதிப்புள்ளவர்களை அடையாளம் காணும் வகையில், கல்லூரி விடுதிகளில் கரோனா பரிசோதனை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக ஆணையர் கோ.பிரகாஷ் புதன்கிழமை கூறியதாவது: சென்னை ஐஐடியில் கரோனா பரவியது தொடர்பாக தொற்று நோய் நிபுணர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். சென்னையில், கரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, சென்னையில் உள்ள அனைத்து கல்லூரி விடுதிகளிலும் கரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
15 நாள்களுக்கு ஒரு முறை இந்த சோதனை செய்யப்படும். தொடர்ந்து 3 அல்லது 4 முறை சோதனை செய்வதன் மூலம் கரோனா பரவலை முற்றிலும் கட்டுப்படுத்த முடியும் என்று அவர் தெரிவித்தார்.
Source: https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2020/dec/17/corona-examination-once-in-15-days-in-chennai-college-hostels-3525328.html