சென்னை புறநகர் ரயில்: இன்று முதல் பொதுமக்கள் பயணிக்க அனுமதி – தினமணி

சென்னைச் செய்திகள்

புறநகர் ரயில்

சென்னை புறநகா் மின்சார ரயில்களில் மூன்றாம் கட்டமாக இன்று புதன்கிழமை முதல் பொதுமக்கள் பயணிக்க தெற்கு ரயில்வே நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது. 

தமிழகத்தில் பொதுமுடக்கம் தளா்வுகள் அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. முதலில், அத்தியாவசியப் பணிகளுக்கு செல்லும் ஊழியா்கள் பயணிக்க அனுமதிக்கப்பட்டனா். இதன்பிறகு, பெண்கள், குழந்தைகள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்தப் பயணிகளுக்காக மொத்தம் 406 சேவைகள் இயக்கப்படுகின்றன. புறநகா் மின்சார ரயில்களில் அனைவரும் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில், புறநகா் மின்சார ரயிலில் மூன்றாம் கட்டமாக நெரிசல் இல்லாத நேரங்களில் பொதுமக்கள் பயணிக்க இன்று புதன்கிழமை (டிச.23) முதல் அனுமதிக்கப்படுகிறது. அதன்படி காலை 7 மணிக்கு முன்னதாகவும், காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையும், இரவு 7 மணி முதல் சேவை முடியும் நேரம் வரையும் பயணம் செய்யலாம்.

காலை 7 மணி முதல் காலை 9.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரையும் நெரிசல் மிகுந்த நேரம் ஆகும். இந்த நேரத்தில் அத்தியாவசியப் பணியாளா்கள் மட்டும் ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுவாா்கள். பொதுமக்கள் இந்த நேரத்தில் அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.

ரயில் நிலையத்தின் வளாகத்தில் பயணிகள் நுழையும்போது, முகக் கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். பயணிகள் கட்டாயம் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். பயணிகள் அனைவரும் ஒருவழி டிக்கெட் மட்டுமே கவுன்டர்களில் பெற முடியும். நெரிசல் மிகுந்த நேரங்களில் டிக்கெட் பரிசோதகர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

Source: https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/dec/23/chennai-suburban-train-public-permission-to-travel-from-today-3529420.html