முகநூலில் பெண் போல் பழகி மோசடி; சென்னை இளைஞரிடம் ரூ.40.5 லட்சம் மோசடி: நைஜீரியக் குடிமகன் கைது – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

முகநூலில் பெண் போல் அறிமுகமாகி, கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞரிடம் பழகி, மோசடி செய்து ரூ.40.5 லட்சத்தை அபகரித்ததாக எழுந்த புகாரின்பேரில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மும்பையில் கைது செய்தனர்.

2019ஆம் ஆண்டு கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த ஜோசப் என்பவர் சென்னை காவல் ஆணையரிடம் கடந்த ஆண்டு புகார் ஒன்றை அளித்தார்.

அவரது புகார் மனுவில், நான் மேட்ரஸ் (Matress) மற்றும் கார்ட் வியாபாரம் செய்து வருகிறேன். என்னிடம் முகநூல் மூலமாக லண்டனைச் சேர்ந்த எலிசபெத் என்கிற பெண் அறிமுகமானார்.

பெண் தொழிலதிபர் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்ட எலிசபெத், தொடர்ந்து முகநூலிலும், அதன் பின் தொலைபேசியிலும் என்னிடம் தொடர்ந்து பேசி வந்தார். நானும் மிகுந்த வசதியுள்ளவர் என்று தெரிவித்த எலிசபெத், ரத்த புற்றுநோயைக் குணப்படுத்தும் போலிக் ஆயில் பற்றிப் பேசினார்.

‘அதில் நல்ல லாபம் உள்ளது. அங்கு குறைந்த விலையில் கிடைக்கிறது. இங்கு மிக அதிக விலைக்கு விற்கலாம். அதனால் போலிக் ஆயிலை வாங்கி ஏற்றுமதி செய்து என்னுடன் சேர்ந்து வியாபாரம் செய்ய முடியுமா? அதில் நல்ல லாபத்தை இருவரும் அதிகமாக ஈட்டலாம்’ என்று எலிசபெத் ஆசைவார்த்தை கூறினார்.

அவர் மூலம் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்குமே என்கிற நம்பிக்கையில், எலிசபெத் கேட்டபடி, போலிக் ஆயிலை வாங்கி அனுப்புவதாகவும், எங்கே எப்படி வாங்குவது என்று கேட்டதற்கு அந்த மருந்தினை வாங்குவதற்கு மும்பையில் உள்ள ஸ்டார் எண்டர்பிரைசஸில் பணிபுரியும் சுனிதா என்பவரை அணுகுமாறும் தெரிவித்தார்.

அதை நம்பி சுனிதாவைத் தொடர்பு கொண்டபோது அவர் 150 லிட்டர் போலிக் ஆயில் பெற 40 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்று தெரிவித்தார். இதுகுறித்து லண்டனில் வசிக்கும் எலிசபெத்திடம் கேட்டதற்கு, நீங்களே பணத்தைக் கட்டி 150 லிட்டர் போலிக் ஆயிலை ஏற்றுமதி செய்து கமிஷன் தொகையை பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினார். அதை நம்பி மும்பை சுனிதா கொடுத்த 5 வங்கிக் கணக்குகளில் 10 தவணைகளில் சுமார் ரூ.40 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் பணத்தைச் செலுத்தினேன்.

அதன் பிறகு போலிக் ஆயிலை அனுப்பிய பின்னர், கமிஷன் தொகையுடன் கூடிய பணத்தை எலிசபெத் என்னிடம் தரவில்லை. அதன் பின்னர் மும்பை சுனிதாவின் நம்பரும், இங்கிலாந்தின் எலிசபெத்தின் போன் நம்பரும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுவிட்டது. எலிசபெத்தின் முகநூல் கணக்கும் போலி எனத் தெரியவந்தது. என்னை ஏமாற்றிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஜோசப் கோரியிருந்தார்.

புகாரைப் பெற்ற சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்துக் குற்றவாளிகளைத் தேடி மும்பை விரைந்தனர்.

குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டது நைஜீரிய நாட்டை சேர்ந்த தற்போது டெல்லி துவாரகாவில் வசிக்கும் ஃபல்ஜன்ஸ் காடியோ (எ) கிறிஸ்டோபர் வில்மர் (27) என்று கண்டறிந்து அவரைத் தேடிச் சென்றனர். அவர் மும்பையில் இருப்பதை அறிந்து மும்பையில் வைத்துக் கைது செய்து, டிரான்சிட் வாரண்ட் மூலம் சென்னைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் சிறையில் அடைத்தனர்.

அதற்கு முன் போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில், பல நபர்களை இதுபோன்று ஏமாற்றியது தெரியவந்தது. புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் மோசடியில் சம்பந்தப்பட்டவர்களைத் தேடி வருகின்றனர்.

சமூக வலைதளங்கள் மூலம் முன்பின் தெரியாதவர்களிடம் பொதுமக்கள் பழகும்போது அவர்கள் கூறும் ஆசைவார்த்தைகளை நம்பி ஏமாறவேண்டாம் என்று சென்னை பெருநகர காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/615094-accustomed-to-cheating-like-a-girlfriend-on-facebook-rs-40-5-lakh-scam-against-chennai-youth-nigerian-citizen-arrested.html