சென்னை காசிமேட்டில் சுனாமி நினைவஞ்சலி – தினமணி

சென்னைச் செய்திகள்

காசிமேட்டில் அதிமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் டி. ஜெயகுமார் கலந்துகொண்டு சுனாமியில் இறந்து போன மீனவர்களுக்கு மலர் தூவியும் மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினார்.

திருவொற்றியூர்: 16 ஆம் ஆண்டு  சுனாமி நினைவு தினத்தையொட்டி நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னை காசிமேடு திருவொற்றியூர் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்றது. 

காசிமேட்டில் அதிமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் டி. ஜெயகுமார் கலந்துகொண்டு சுனாமியில் இறந்து போன மீனவர்களுக்கு மலர் தூவியும் மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினார். பின்னர் படகில் சென்ற அமைச்சர் ஜெயகுமார் கடல் பகுதிக்குச் சென்று கடலில் பால் ஊற்றி மலரஞ்சலி செலுத்தினார்.

அதிமுக சார்பில் நடைபெற்ற மற்றொரு நிகழ்ச்சியில் கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் கலந்துகொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாவட்ட செயலாளர் ஆர் எஸ் ராஜேஷ் சுனாமியால் மறைந்து போனவர்களுக்கு அஞ்சலி செலுத்தி பின்னர் அங்கிருந்த பொது மக்களுக்கு உணவு வழங்கினா்.

காசிமேட்டில் மீன்வளத்துறை அமைச்சர் டி. ஜெயகுமார் சுனாமியில் இறந்து போன மீனவர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். 

திருவொற்றியூர் கடற்கரை பகுதியில் பகுதி செயலாளர் கே குப்பன் முன்னாள் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற சுனாமி நினைவு அஞ்சலி கூட்டத்தில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மாதவரம் வி. மூர்த்தி கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். 

திமுக சார்பில் திருவொற்றியூர் திருச்சினாங் குப்பம் பகுதியில் மாநில மாணவரணி அமைப்பாளர் திருவொற்றியூர் பத்மநாபன் தலைமையில் சுனாமி நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ். பாரதி, மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ, மாணவரணி துணை அமைப்பாளர் கவி கணேசன் உள்ளிட்டோர் தலைமையில் ஏராளமான திமுகவினர் கலந்துகொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.  திருவொற்றியூர் பகுதியில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்ச்சி தொகுதி செயலாளர் கே.பி. சங்கர் தலைமையில் நடைபெற்றது. 
 

Source: https://www.dinamani.com/tamilnadu/2020/dec/26/tsunami-memorial-in-chennai-kasimedu-3531617.html