Published : 27 Dec 2020 03:15 am
Updated : 27 Dec 2020 07:59 am
Published : 27 Dec 2020 03:15 AM
Last Updated : 27 Dec 2020 07:59 AM

சென்னை
சென்னை முழுவதும் அனைத்து மண்டலங்களிலும் உள்ள சட்டவிரோத மற்றும் விதிமீறல் கட்டிடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் 5-வது மண்டலத்துக்கு உட்பட்ட 5,584 சட்டவிரோத கட்டிடங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.
அப்போது மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் ஆஜராகி, 5-வது மண்டலத்தில் விதிமீறி கட்டப்பட்டு இருந்த கட்டிடங்களுக்கு எதிராக நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்தார்.
அப்போது, 5-வது மண்டலத்தைப் போல பிற மண்டலங்களில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்கள் மீதும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு மாநகராட்சி தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், சென்னை முழுவதும் உள்ள அனைத்து மண்டலங்களிலும் உள்ள விதிமீறல், சட்டவிரோதக் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்வதாக உறுதி அளித்தார்.
அதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை ஜன.5-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Source: https://www.hindutamil.in/news/tamilnadu/615980-chennai-corporation.html