சென்னை: இன்ஸ்ட்ராகிராம் பழக்கம்; இன்ஜினீயரிங் மாணவனை நம்பிச் சென்ற சிறுமிகள்- 6 மணிநேரத்தில் மீட்பு – Vikatan

சென்னைச் செய்திகள்

சென்னை கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (பெயர் மாற்றம்). இவர் பல் மருத்துவ ஆய்வகம் நடத்திவருகிறார். இவரின் மகள் 13 வயது சிறுமி. ராஜாவின் தம்பி மகளுக்கு 7 வயதாகிறது. இந்த இரண்டு சிறுமிகளும் கடந்த 26-ம் தேதி வெளியில் சென்றனர். அதன் பிறகு நீண்ட நேரமாகியும் இருவரும் வீடு திரும்பவில்லை. அதனால் சிறுமிகளின் பெற்றோர் பல இடங்களில் தேடியும், அவர்கள் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து 13 வயது சிறுமியின் தந்தை ராஜா கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் 26-ம் தேதி இரவு 10 மணியளவில் புகாரளித்தார். அதன்பேரில் கோட்டூர்புரம் போலீஸார், இரண்டு சிறுமிகளையும் தேடினர். மயிலாப்பூர் காவல் மாவட்ட சைபர் க்ரைம் பிரிவு போலீஸார் சிறுமியின் செல்போன் சிக்னலைக் கண்காணித்தனர். அப்போது சிறுமியின் செல்போன் சிக்னல் பறக்கும் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டதைக் காட்டியது. இந்தத் தகவலை சைபர் க்ரைம் போலீஸார் கோட்டூர்புரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக கோட்டூர்புரம் போலீஸார் ரயில்வே போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

மின்சார ரயில்
representational image

அதோடு சிறுமிகளின் புகைப்படங்கள் மற்றும் அவர்கள் குறித்த விவரங்களை ரயில்வே போலீஸாரின் வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்தனர். அப்போது விழுப்புரம் அருகே பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த திருநங்கை ஒருவர், சிறுமி ஒருவர் ரயில் பெட்டியில் அழுதுகொண்டே இருக்கும் தகவலை போலீஸாரிடம் தெரிவித்தார். உடனடியாக ரயில்வே போலீஸார், சம்பந்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயிலில் பணியிலிருந்த டிக்கெட் பரிசோதகருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து டிக்கெட் பரிசோதகர், இரண்டு சிறுமிகளையும், அவருடன் பயணித்த இளைஞர் ஒருவரையும் மீட்டு விழுப்புரம் ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் கோட்டூர்புரம் போலீஸார், விழுப்புரத்துக்குச் சென்று இரண்டு சிறுமிகளையும் இளைஞரையும் மீட்டு சென்னைக்கு அழைத்து வந்தனர். சிறுமிகள் காணாமல் போன ஆறு மணி நேரத்திலேயே கோட்டூர்புரம் இன்ஸ்பெக்டர் அஜிகுமார் மற்றும் போலீஸார் சிறப்பாகச் செயல்பட்டு, அவர்களை மீட்டனர். அதனால் கோட்டூர்புரம் போலீஸ் டீம் மற்றும் சிறுமியை மீட்க உதவிய ரயில்வே போலீஸாருக்கு சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பாராட்டி, வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-police-rescued-2-girl-child-in-6-hours